வெளியிடப்பட்ட நேரம்: 13:36 (12/09/2017)

கடைசி தொடர்பு:14:53 (12/09/2017)

‘அ.தி.மு.க பொதுக்குழுவில் என்ன ஸ்பெஷல்? - நேரடி ரிப்போர்ட்

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி


சென்னை வானகரத்தில் நடந்த அ.தி.மு.க-வின் இரண்டு அணிகள் சார்பில் நடந்த பொதுக்குழுவில் பங்கேற்றவர்களுக்கு, காலை சிற்றுண்டியே அசத்தலாக வழங்கப்பட்டுள்ளது. மதியம் சைவ உணவு வழங்கப்பட்டது. மேலும், பொதுக்குழுவில் பங்கேற்றவர்களை ஸ்பெஷலாகக் கவனிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு திட்டமிட்டுள்ளது.

சசிகலா குடும்பத்தை அ.தி.மு.க-விலிருந்து ஓரம்கட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முடிவு செய்தனர். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, கடந்த டிசம்பரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில், தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வுசெய்யப்பட்டார். சசிகலாவின் நியமன விவகாரத்துக்கு விளக்கம் கேட்டுள்ளது, தேர்தல் ஆணையம். இதற்கிடையில் சசிகலாவுக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், அ.தி.மு.க. இரண்டு அணிகளாகப் பிரிந்தது. 
 சசிகலா அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகளாகப் பிளவுப்பட்ட அ.தி.மு.க-வின் இரட்டை இலைச் சின்னம், முடக்கப்பட்டது. அதோடு, ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு புரட்சித் தலைவி அம்மா என்றும் சசிகலா அணிக்கு அம்மா அ.தி.மு.க. அணி என்றும் தேர்தல் ஆணையம் பெயரிட்டது.

இந்தச் சூழ்நிலையில், சசிகலாவின் குடும்பத்தை கட்சியிலிருந்து விலக்கக் கோரி, ஓ.பன்னீர்செல்வம் அணி தர்மயுத்தத்தைத் தொடங்கியது. சசிகலா அணியிலிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் சசிகலா குடும்பத்துக்கு எதிராகச் செயல்பட முடிவுசெய்தார். இதனால், இரண்டு அணிகளும் இணைந்தன. சசிகலா சிறையிலிருப்பதால், அவரால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட பலரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கிவிட்டு, தன்னுடைய ஆதரவாளர்களுக்குப் பதவிகளை வழங்கினார். தினகரனின் இந்த அதிரடிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஏற்பாடுசெய்தது. அதன்படி, சென்னை வானகரத்தில் இன்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. தினகரனின் நீக்கம் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு பொதுச் செயலாளர் அதிகாரம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது என முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சசிகலா, தினகரனுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும்போது, பொதுக்குழு கூட்ட அரங்கில் பிரச்னை ஏற்படலாம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், அதற்குப் பதிலாக சசிகலாவின் பதவி பறிக்கப்படுவதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தீர்மானத்தை வாசித்தபோது, கைதட்டல் சத்தம் அரங்கை அதிரவைத்தது. அதை, மேடையிலிருந்தப்படி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கவனித்துக்கொண்டிருந்தனர். அவர்கள் உள்பட மேடையில் அமர்ந்திருந்த அமைச்சர்களின் முகங்கள் பளீச் என காணப்பட்டன.

அதன்பிறகு, ஒவ்வொரு தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது. சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்பட்ட தகவல், போன் மூலம் தினகரனுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர், மதுரையில் இருந்தார். சென்னைக்குப் புறப்படத் தயாராக இருந்த தினகரன், உடனடியாக பிரஸ் மீட்டுக்கு ஏற்பாடுசெய்ய உத்தரவிட்டார். அதன்படி, பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடந்தது. அதில் காட்டமாகப் பேசிய தினகரன், 'நடந்தது பொதுக்குழுவே இல்லை. அது கூட்டம்' என்று கூறினார். மேலும், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்த அவர், இந்த ஆட்சி வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதாகவும், வரும் தேர்தலில் தி.மு.க-வுக்கு எதிரான போட்டியாளர்கள் நாங்கள்தான் என்றும் கூறினார். இதனால், தினகரன் ஆட்சிக் கவிழ்ப்புக்குத் தயாராகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகிறது. 

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டடம்

இதற்கிடையில், பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களை ஸ்பெஷலாகக் கவனிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உத்தரவிட்டிருந்தனர். இதனால், பொதுக்குழுவில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, வடை, பொங்கல், பூரி, கேசரி, மூன்று வகைச் சட்னி, சம்பார் என அமர்க்களப்படுத்தப்பட்டுள்ளது. மதியம் சைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஸ்பெஷல் கவனிப்பு உள்ளதாம்.

கூட்டம் முடிந்ததும் நட்சத்திர ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்படும் உறுப்பினர்களுக்கு, அங்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளதாம். உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டால் சுதாரித்த முதல்வரும், துணை முதல்வரும் மதில் மேல் பூனையாக இருந்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களின் மனநிலையைக் கொங்கு மண்டல அமைச்சர்கள் குழு மாற்றிவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பொதுக்குழுக் கூட்டத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக யாரும் அழைக்கப்படவில்லை. பொதுக்குழு அழைப்பிதழ்களோடு வந்தவர்கள் மட்டுமே அரங்கத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் பாதுகாப்போடு, தனியார் செக்யூரிட்டிகளும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால், எந்தவித களேபரமுமில்லாமல் அமைதியாகவே பொதுக்குழு நடந்து முடிந்துள்ளது. இதனால், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும், பொதுக்குழு ஏற்பாடுகளை சிறப்பாகச்செய்த அமைச்சர்கள் பெஞ்சமின்,  மாஃபா.பாண்டியராஜன், மாவட்டச் செயலாளர் அலெக்ஸாண்டர் ஆகியோரை அழைத்துப் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலைச் சமாளிக்கத் தயாராக வந்திருந்த போலீஸாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டதோடு, கைக்குக் கிடைத்த உணவுப் பொட்டலங்களை வாங்கி சாப்பிட்டனர்.

தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், சசிகலா தரப்பிலிருந்து அடுத்துவரும் எதிர்விளைவுகளைச் சமாளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தியுள்ளனர். சட்டரீதியாக அதை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன.


டிரெண்டிங் @ விகடன்