’ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும் அசைக்க முடியாது’ - பொதுக்குழுவில் சூளுரைத்த எடப்பாடி பழனிசாமி | Edappadi palanisamy speech in ADMK GS Meet

வெளியிடப்பட்ட நேரம்: 13:07 (12/09/2017)

கடைசி தொடர்பு:13:14 (12/09/2017)

’ஓராயிரம் தினகரன்கள் வந்தாலும் அசைக்க முடியாது’ - பொதுக்குழுவில் சூளுரைத்த எடப்பாடி பழனிசாமி

ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது என்று அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். 


சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. பொதுக்குழுக் கூட்டத்தில் சசிகலா நீக்கம், பொதுச்செயலாளர் பதவியே இல்லை, கட்சியிலிருந்து ஒருவரை நீக்க, சேர்க்க ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அதிகாரம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன


கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ’ஜெயலலிதா இல்லாத நிலையில் நாம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். பொதுக்கூட்டத்துக்கு நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்குக் கிடைத்த முதல் வெற்றி. பிரிந்த இயக்கம் ஒன்று சேர்ந்த வரலாறு இல்லை; ஆனால், நாம் ஒன்றிணைந்திருக்கிறோம். அதேபோல், தமிழகத்தில் தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியைப் பிடித்தது அ.தி.மு.க.தான். இனி யார் நினைத்தாலும் அ.தி.மு.கவை அழிக்க முடியாது. ஏன், ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் கட்சியையும், ஆட்சியையும் அசைக்க முடியாது. கட்சியில் உறுப்பினராக இல்லாத டி.டி.வி.தினகரன் மற்றவர்களை எப்படி நீக்க முடியும்?. துரோகம் செய்ததால் ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், எங்களைத் துரோகிகள் என்பதா?. கடந்த 10 ஆண்டுகளாக தினகரன் எங்கிருந்தார்?’ என்று அவர் பேசினார்.