வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (12/09/2017)

கடைசி தொடர்பு:13:50 (12/09/2017)

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஓங்கி ஒலித்த நீட் தேர்வுக்கு எதிரான முழக்கங்கள்!

தேனி மாவட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்த ஜாக்டோ ஜியோ போராட்டத்தில், நீட்தேர்வுக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கடந்த 7-ம் தேதி தொடங்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஜாக்டோ ஜியோ போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்துவருகிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த அம்சங்களையும் உடனே அமல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இன்று காலை கலெக்டர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் சுமார் 1000பேர் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். போராட்டக்காரர்கள் ஏந்திய பதாகைகளில் அனிதாவின் படங்களே அதிகமாகக் காட்சியளித்தன. புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கங்களோடு, நீட் தேர்வை ரத்து செய் போன்ற கோஷங்களும் முன்வைக்கப்பட்டன. இப்போராட்டத்தால் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து போலீஸார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டு அனைவரையும் கைது செய்து தனியார் வாகனங்கள் மூலம் அழைத்துச்செல்லப்பட்டு, தேனியில் உள்ள தனியார் மகால்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.