மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை! | Vigilance police enquiring controller of exams in Manonmaniam sundaranar university

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (12/09/2017)

கடைசி தொடர்பு:14:30 (12/09/2017)

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக அதிகாரியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை!

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், பல்கலைக்கழக அதிகாரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பல்கலைக்கழகம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக பாஸ்கர் உள்ளார். ரிஜிஸ்டர் பொறுப்பில் ஜான் டி பிரிட்டோ உள்ளார். பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக பிரபாகர் செயல்பட்டு வருகிறார். இந்தப் பல்கலைக்கழகத்தில் கடந்த ஓரிரு வருடங்களாக நிதி மோசடி அதிக அளவில் நடப்பதாக புகார்கள் எழுந்தன. 

பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்துக் கல்லூரிகளும் கணினியுடன் இணைக்கப்பட்டன. மாணவர்கள் தங்களுடைய தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் ஆன் லைன் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டுமென திடீரென்று உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக தனியார் மென்பொருள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு அவுட் சோர்ஸிங் முறையில் பணிகள் நடந்தன. அதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன.

விசாரணை

பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரான பிரபாகர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்வுத் துறையை கணினிமயமாக்கியதில் சுமார் 2 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்ததாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தி வருவதாக பல்கலைக்கழக வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர். இதையடுத்து தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரான பிரபாகர் மற்றும் அவரது உதவியாளர் அறையை லஞ்ச ஒழிப்புத் துறையினர் மூடி விட்டனர். அவரை அழைத்துச் சென்று நேற்று இரவு முதல் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவரிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் பல்கலைக்கழக அலுவலகத்தில் சோதனை நடத்தவும் மேலும் சில அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் லஞ்ச ஒழிப்புப் துறை போலீஸார் திட்டமிட்டுள்ளனர். விரைவில் பல்கலைக்கழகத்துக்கு லஞ்ச ஒழிப்புத் துறை வரவிருப்பதாக  தகவல் எழுந்துள்ளது. 

பேரா.பிரபாகர்பல்கலைக்கழகத் தரப்பினரிடம் இது பற்றிக் கேட்டதற்கு, ‘’’பல்கலைக்கழகத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரான பிரபாகர், முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தார். 2008-ம் வருடத்தில், எம்.பில் படிப்பில் தகுதி இல்லாத ஒருவரைத் தேர்வு செய்ததாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் பாதிக்கப்பட்டவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த விவகாரம் தொடர்பாகவே தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரித்து வருகிறார். இது தவிர லஞ்சப் புகார் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை’’ என்று சொல்கிறார்கள். 

இது பற்றி நேர்மையான சில பேராசிரியர்களிடம் பேசுகையில், ’பல்கலைக்கழகத்தில் முறைகேடுகள் நடப்பது உண்மை. ஆனால், இதில் உண்மையான குற்றவாளிகளுக்குப் பதிலாக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார். அவர் தனக்குத் தெரிந்த உண்மைகளை எல்லாம் தெரிவித்து இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்த வேண்டுமே தவிர, அவர் பலியாகிவிடக் கூடாது’ என்கிறார்கள். 

இந்த விவகாரம் பல்கலைக்கழக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பல்கலைக்கழக ஊழியர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களும் இந்த விவகாரம் குறித்து பரபரப்பாக விவாதித்து வருகின்றனர்.