வெளியிடப்பட்ட நேரம்: 14:02 (12/09/2017)

கடைசி தொடர்பு:14:24 (12/09/2017)

பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரம்: உயர் நீதிமன்றத்தில் தி.மு.க புதிய மனு

சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 


சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று தி.மு.க. சார்பில் ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்து தி.மு.க. சார்பில் 2 முறை மனு அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆளுநரைக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு அளித்துவந்த ஆதரவை 22 எம்.எல்.ஏக்கள் வாபஸ் பெற்றுவிட்டதால், அரசு பெரும்பான்மையை இழந்து விட்டது. எனவே சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உடனடியாக உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆளுநரைச் சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் ஒருவாரத்தில் உத்தரவிடாவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம் என்று கூறியிருந்தார். 

இந்தநிலையில், சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிடக் கோரி தி.மு.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘பெரும்பான்மை விவகாரத்தில் ஜனநாயக முறையில் ஆளுநர் செயல்படக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளோம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசுக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று கூறி வருகிறார். அப்படியென்றால் அவரே பரிந்துரை செய்து சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்கட்டும். பேரவை கூட்டப்பட்டால் அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தி.மு.க. கொண்டுவரும். தமிழகத்தில் கொல்லைப்புறமாக ஆட்சியைப் பிடிக்க என்றுமே தி.மு.க. முயற்சி செய்யாது. அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள், அந்த கட்சியின் உள்கட்சி விவகாரம்; அதில் தலையிட விரும்பவில்லை. தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி என்று கூறி தினகரன் விளம்பரம் தேடப் பார்க்கிறார்’ என்று தெரிவித்தார்.