வெளியிடப்பட்ட நேரம்: 16:15 (12/09/2017)

கடைசி தொடர்பு:16:15 (12/09/2017)

டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்ட எம்.எல்.ஏ!

நெல்லையில் புதிதாகத் திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக அகற்றக்கோரி தாசில்தார் அலுவலகத்தை எம்.எல்.ஏ தலைமையில் பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

டாஸ்மாக் எதிர்ப்பு

நெல்லை மாவட்டம் ஆலங்குளம் நகரில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன. நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள், நீதிமன்ற உத்தரவால் அகற்றப்பட்டபோது இந்தக் கடைகள் அகற்றப்பட்டன. இதனால் ஆலங்குளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் நிம்மதி அடைந்தனர். ஆலங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதியில் இருந்த கடைகள் அடைக்கப்பட்டதால் அப்பகுதி வழியாக தினமும் பள்ளிக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் நடமாடி வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த 3 மதுக்கடைகளையும் டாஸ்மாக் அதிகாரிகள் மீண்டும் ஆலங்குளத்தில் திறந்தனர். நெடுஞ்சாலையின் அருகில் இந்தக் கடைகள் திறக்கப்பட்டன. இதனால் அந்த வழியாக பெண்கள் நடமாட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. குடிமகன்கள் அளவுக்கு அதிகமாக மதுகுடித்து விட்டு சாலை ஓரத்தில் துணிகள் இல்லாமல் விழுந்து கிடக்கும் அவலம் இருப்பதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். 

போராட்டம்

இதனால் இந்த மதுக்கடைகளை அடைக்கக் கோரி, பொதுமக்கள்  அதிகாரிகளிடம் மனு அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரான பூங்கோதை ஆலடிஅருணா தலைமையில் இன்று வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடத்தினர். ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின்போது, பூங்கோதை தலைமையில் அதில் பங்கேற்றவர்கள் தாசில்தார் அலுவலகத்துக்குள் நுழைந்து முற்றுகையிட்டனர்.

பின்னர், காவல்துறையினர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தாசில்தார் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து கலைந்து சென்றனர். இது குறித்து பேசிய எம்.எல்.ஏ பூங்கோதை, ‘’இந்தப் பகுதியில் மதுக்கடை அடைக்கப்பட்ட பின்னர் எந்தப் பிரச்னையும் இல்லாமல் மக்கள் அமைதியாக இருந்தார்கள். ஆனால், இப்போது கடை திறக்கப்பட்டதால் அடிக்கடி சண்டைகள் நடக்கின்றன. சட்டம்-ஒழுங்கு பிரச்னை அதிகமாக நடக்கிறது.  

நெடுஞ்சாலையின் அருகில் இந்த மதுக்கடைகள் இருப்பதால் பெண்களால் சாலையில் நடமாடவே முடியவில்லை. பேருந்து நிலையத்துக்குச் செல்ல முடியவில்லை. பள்ளிக் குழந்தைகள் பாதுகாப்பாக சென்று திரும்ப முடியாத நிலைமை உள்ளது. அதனால் உடனடியாக டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி முற்றுகைப் போராட்டம் நடத்தினோம். இனியும் இந்தக் கடையை மூட மறுத்தால், பெண்களைத் திரட்டி டாஸ்மாக் கடையின் முன்பாக அமர்ந்து முற்றுகையிடுவோம். இந்தப் பகுதியிலிருந்து மதுக்கடையை முழுமையாக அகற்றும் வரையிலும் எங்களது போராட்டம் தொடரும்’’ என்றார் உறுதியுடன்.