"பணி இழப்புக்காக வருந்தவில்லை... இனி முழுநேரமும் போராடுவேன்!" - ஆசிரியை சபரிமாலா தீர்க்கம் | Teacher sabarimala interview

வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (12/09/2017)

கடைசி தொடர்பு:17:30 (12/09/2017)

"பணி இழப்புக்காக வருந்தவில்லை... இனி முழுநேரமும் போராடுவேன்!" - ஆசிரியை சபரிமாலா தீர்க்கம்

ஆசிரியை சபரிமாலா

னிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டியும் நீட் தேர்வுக்கு எதிராகப் போராட அனுமதி மறுக்கப்பட்டதற்காகவும் கடந்த 7-ம் தேதி தனது ஆசிரியர் பணியை ராஜினாமா செய்தவர் ஆசிரியை சபரிமாலா. தற்போது இவர் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்களில் கலந்துகொண்டு மாணவர்களுக்குக் கல்வி பற்றிய விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதுடன், ‘கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற பாடுவடுவதே இனி என் பணி’ எனக் கிளம்பியுள்ளார். அவரை சந்தித்தோம்.

“உங்கள் ஆசிரியர் பணியை ராஜினாமா செய்ததற்கான காரணம்?”

“நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராடி உயிர் நீத்தவர் மாணவி அனிதா. அவருக்காக நினைவு அஞ்சலி செலுத்தவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் ‘ஒருநாள் உண்ணாவிரத போராட்டம்’ இருந்தேன். ஆனால், ஆசிரியராக இருந்துகொண்டு போராட்டம் நடத்தக்கூடாது என்று அரசுத் தரப்பில் கூறிவிட்டார்கள். மேலும், போராட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி வாங்கச் சொன்னார்கள். என்னுடைய உணர்வையும், தன்னெழுச்சியான என்னுடைய கருத்தையும் சொல்லுவதற்கு இந்தப் பணிதான் இடைஞ்சல் என்றால், அப்படி ஒரு அரசுப் பணி எனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து எனது வேலையை ராஜினாமா செய்தேன்.”

“வேலையை ராஜினாமா செய்தபிறகு போலீஸிடம் இருந்து உங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறதா?”

மாணவி அனிதா

“அதிகமான அழுத்தம் கொடுக்கிறார்கள். அரசுப் பணியில் இருந்துகொண்டு உரிமைக்காக போராடக்கூடாது என்பதால் என் பணியை துறந்தேன். அதன்பிறகு கடந்த 8-ம் தேதி என் வீட்டினுள் அமர்ந்து போராட்டம் செய்தேன். அங்கு எனக்கு ஆதரவு தருவதற்காகப் பல பேர் வந்தார்கள். அனைவருமே வீட்டினுள் அமர்ந்து அமைதியான முறையில் போராட்டம் நடத்தினோம். அங்கு வந்த காவல்துறை நீங்கள் ‘உங்கள் வீட்டுக்குள்ளும் போராட்டம் செய்யக்கூடாது. உங்களுக்கு ஆதரவாக வந்த மக்களை வெளியேறச் சொல்லுங்கள். அரசுக்கு எதிராகப் போராடுவது தவறு’ என மிரட்டினார்கள். ‘சாலையில் அமர்ந்து போராடினால்தானே உங்கள் சட்டத்துக்கு எதிரானது. ஆனால், அனைவருமே என் வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள். அதனால் வெளியே போக மாட்டார்கள்’ என்றேன். வலுக்கட்டாயமாக அவர்களை வெளியேற்றி எங்கள் போராட்டத்தைத் தொடராதவாறு செய்தனர். அதுமட்டுமல்லாமல் தற்போது நான் நீட்-டுக்கு எதிராகப் போராடச் சென்றால் அழுத்தம் கொடுக்கிறார்கள்.”

“கல்விமுறையில் எந்த மாதிரியான மாற்றம் கொண்டுவரணும்னு நினைக்குறீங்க?”

“மெட்ரிக், சி.பி.எஸ்.இ, என அவங்கவங்க வசதிக்கு ஏத்தமாதிரியான கல்விமுறை இந்தியாவுல இருக்குற வரைக்கும் ஏற்றத்தாழ்வற்ற இந்தியாவை எப்படி உருவாக்க முடியும். முதலில் தமிழ்நாட்டில் தாய்மொழியில் படிக்குற உரிமை இல்ல. ஆங்கிலத்தை முதல் மொழியாக வைக்க அரசாங்கமே முடிவு பண்ணிடுச்சி. இப்போ நம்முடைய கல்வி உரிமை பறிக்கப்பட்டுக்கொண்டு இருக்கிறது. முதல்ல நாம அந்த உரிமைய மீட்கணும். அதுக்கு கல்வியை பொதுபட்டியல்ல இருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரணும். இல்லையென்றால் நம்முடைய வருங்கால சந்தியினருக்கு கல்வி உரிமை இல்லாமலே போய்விடும். கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்தால் சிலபஸ் உருவாக்குவதில் இருந்து தேர்வு வைப்பது வரை அனைத்தும் நம்மிடம் இருக்கும். அதை சிறப்பாக செயல்படுத்தினால் தேசிய அளவு தேர்வு மட்டுமல்ல சர்வதேச அளவு தேர்வு என்றாலும்கூட நம் மாணவர்கள் ஈஸியா ஜெயிப்பார்கள்.”

“இது சாத்தியப்படுமா?”

“கண்டிப்பாக சாத்தியப்பட வேண்டும். அதுக்குதான் நாம போராட வேண்டும். இல்லை என்றால் தின லட்சியத்தோட ஆசிரியர்கள் பாடம் நடத்துவாங்க. மாணவர்களும் வெறியோடு படித்து பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மார்க் எடுப்பார்கள். அதுக்குப் பிறகு? அரசால் ஏமாற்றப்பட்டு அனிதாவோட புள்ளியிலே மறுபடியும், மறுபடியும் மாணவர்கள் வந்து நிற்பார்கள். இது தொடர வேண்டுமா? திறமையான ஆசிரியை சபரிமாலா மாணவர்கள் தமிழ்நாட்டில் அதிகம். ஆனா ஏழைக்கொரு கல்வி, பணக்காரனுக்கு ஒரு கல்வி எனப் பிரித்து அந்தத் திறமையான மாணவர்களை வளரவிடாமல் ஆரம்பத்திலேயே அழித்துவிடுகிறார்கள்.”

“பணியை இழந்தது வருத்தமளிக்கவில்லையா? இது உணர்ச்சிவசப்பட்ட முடிவு என விமர்சிக்கப்படுகிறதே?”

“அரசியல்வாதிகள் உணர்ச்சிவசப்பட்டு நடத்தாத கூத்துகளைவிடவா, நான் உணர்ச்சிவசப்பட்டு எடுத்துவிட்டேன். பணியை இழந்ததில் சிறிதளவும் எனக்கு வருத்தம் இல்லை. அரசுப் பணியில் இருந்துகொண்டு என் மாணவர்களின் உரிமைக்காகப் போராடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பதைவிட, என் மாணவர்களின் உரிமைக்காகக் களத்தில் நின்று போராடுவதற்கு தற்போது அதிக நேரம் கிடைத்திருக்கிறது. அதுமட்டுமல்ல என்னுடைய உணர்வுகளை அனுமதி வாங்கித்தான் வெளிப்படுத்த வேண்டும் என்றால் அது ஒரு அடிமை வாழ்க்கைதானே? அடிமை வாழ்க்கை வாழ்ந்தென்ன... செத்தென்ன? இனி நான் சுதந்திரமாக மாணவர்களின் உரிமைக்காகப் போராடுவேன்.”

“உங்களுடைய அடுத்தகட்டப் போராட்டம்?”

“இனி ஒவ்வொரு பள்ளிக்கூடத்துக்கும் கல்லூரிகளுக்கும் சென்று மாணவர்களுக்குக் கல்வி பற்றிய விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதுடன், தொடர்ந்து கல்வி உரிமை என் மாணவர்களுக்குக் கிடைக்கப் போராடிக்கொண்டே இருப்பேன்.


டிரெண்டிங் @ விகடன்