Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நவோதயா பள்ளிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும்- திருநாவுக்கரசர் ஆதரவு!

தமிழகத்தில், நவோதயா பள்ளிகளைத் திறக்க திருநாவுக்கரசர் ஆதரவு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய அளவிலான நீட் தேர்வு, மத்திய பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட்டதால், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் அதிகளவில் வெற்றிபெற முடியாமல் வஞ்சிக்கப்படும் நிலை ஏற்பட்டது. ஏனெனில், கிராமப்புற மாணவர்களுக்கு மத்திய பாடத்திட்டத்தின்படி நடைபெறும் பள்ளிகளோ, பயிற்சி வகுப்புகளோ இல்லாததுதான். இந்நிலையில், மதுரை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், நவோதயா பள்ளிகளுக்கான தடையில்லாச் சான்றை எட்டு வாரங்களுக்குள் தமிழக அரசு வழங்க வேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை, தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன். 


நவோதயா பள்ளிகளைக் கிராமப்புறங்களில் தொடங்க வேண்டுமென்று பிரதமர் ராஜீவ் காந்தி எடுத்துக்கொண்ட முயற்சியின் விளைவாக, 1986-ம் ஆண்டில் புதிய கல்விக்கொள்கையில் இதற்கான பரிந்துரை செய்யப்பட்டது. இந்தக் கல்வித் திட்டத்தின்படி, மாவட்டத்துக்கு ஒரு நவோதயா பள்ளி கிராமப்புற பின்னணியில் தொடங்கப்பட வேண்டும். இதில் 6-வது வகுப்பு  முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளியிலேயே தங்கி நவீன, தரமான கல்வியை வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பள்ளியில், 75 சதவிகித மாணவர்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களாகவும் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படுவதோடு, 33 சதவிகிதம் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

கடந்த 2015-16ல், நாடு முழுவதும் உள்ள 589 நவோதயா பள்ளிகளுக்கு 1905 கோடி ரூபாய்  ஒதுக்கப்பட்டது. இதில், 2 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இப்பள்ளியில் படிக்கும் ஒரு மாணவருக்கு, 85 ஆயிரம்ரூபாய் மத்திய அரசு செலவழிக்கிறது. நகர்ப்புறங்களில் கிடைக்கும் தரமான கல்வியை கிராமப்புறத்தில் வாழ்கிற பின்தங்கிய, ஆதிதிராவிட, மகளிருக்கு இலவசமாக வழங்க வேண்டும் என்கிற உயர்ந்த நோக்கத்தில், நவோதயா பள்ளிகள் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் தொடங்கப்பட்டு, மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பள்ளிகளில் வழங்கப்பட்ட தரமான கல்வியை அடிப்படையாகவைத்து, இந்திய ஆட்சிப் பணி, இந்தியத் தொழில்நுட்பக் கழகம், நீட் நுழைவுத் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சிபெற்று 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்து படிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. 

இந்நிலையில், தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுகிறது என்கிற கருத்தின் அடிப்படையில் மாநில அரசு அனுமதி வழங்காமல் மறுத்துவருகிறது. நவோதயா பள்ளி திட்டத்தின்படி, 6 முதல் 10-ம் வகுப்பு வரை தமிழில்தான் பாடம் கற்பிக்கப்படுகிறது. 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் தமிழ் மொழி விருப்பப் பாடமாகவும் வைக்கப்பட்டுள்ளது. நவோதயா பள்ளியைப் பொறுத்தவரை, மும்மொழிக் கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தற்போது, தமிழகம் முழுவதும் 1909 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 12 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். தமிழகத்தில் 45 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்துவருகின்றனர். இந்தப் பள்ளிகளில் மும்மொழித் திட்டம்தான் நடைமுறையில் இருக்கிறது. இதை அனுமதிக்கும் தமிழக அரசு, நவோதயா பள்ளிகளை அனுமதிக்க மறுப்பது ஏன்? தேவையற்ற  மொழி சர்ச்சையை ஏற்படுத்தாமல், நவோதயா பள்ளிகள்குறித்து தெளிவான பார்வை இருந்தால், எவரும் இதை எதிர்க்க மாட்டார்கள்.

நவோதயா பள்ளிகளைத் தமிழகத்தில் தொடங்கினால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 20 கோடி ரூபாய் ஒதுக்குவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளதாக, மதுரை உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி 32 மாவட்டத்துக்கும் ரூபாய் 20 கோடி வீதம்  640 கோடி ரூபாய் தமிழகத்துக்கு வரவேண்டிய தொகை வராமல் தடுக்கப்பட்டுவருகிறது. இது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

எனவே, கிராமப்புறத்தில் தரமான, நவீன கல்வி வசதியில்லாத சூழலில், நவோதயா பள்ளிகள் தொடங்கப்படுவது மிகமிக அவசியமாகும். இந்தப் பள்ளியில், மாவட்டத்துக்கு 100 மாணவர்கள்தான் சேர்க்கப்படுகிறார்கள். இதில் சேர வேண்டுமென்பது கட்டாயமல்ல. விருப்பப்பட்டவர்கள் நவோதயா பள்ளிகளில் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பை தமிழக அரசு உருவாக்க வேண்டும். இத்தகைய வாய்ப்பை மறுக்காமல், மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின்படி நவோதயா பள்ளிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close