வெளியிடப்பட்ட நேரம்: 15:17 (12/09/2017)

கடைசி தொடர்பு:15:24 (12/09/2017)

ஜெயலலிதாபோல் வருமா விருந்து சாப்பாடு? சோகத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள்

சென்னை வானகரத்தில் அ.தி.மு.க-வின் இரண்டு அணிகள் சார்பில் இன்று பொதுக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு காலை சிற்றுண்டியாக இட்லி, வடை, மூன்று வகை சட்னி, பொங்கல் என டிபன் வகைகள் வழங்கப்பட்டுள்ளன. இன்று செவ்வாய்க்கிழமை என்பதால் அசைவ உணவு வழங்கப்படவில்லை. மாறாக சைவ உணவு பரிமாறப்பட்டுள்ளது.

வெஜிடபுள் பிரியாணி, சாதத்துடன் சாம்பார், ரசம், மோர், தயிர், வடை, பால் பாயசம், ஒரு அவியல், கேரட், பீன்ஸ் பொரியல், கிழங்கு வறுவல், அப்பளம், ஜாங்கரி, ஜஸ்க்ரீம், பாதாம் பால், வாழைப்பழம் ஆகியவைப் பரிமாறப்பட்டுள்ளன. இது, அசைவப் பிரியர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இது குறித்து அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினர்கள் கூறுகையில், "அம்மா உயிரோடு இருந்தபோது நடந்த பொதுக்குழு விருந்தில் அசைவ உணவு பரிமாறப்படும். பிரியாணியில் அதிக அளவு மட்டன் கறி இருக்கும். அதோடு வஞ்சிர மீன் வறுவல் நாக்கில் எச்சில் ஊறவைக்கும். ஆனால், இந்தப் பொதுக்குழு சாப்பாடு திருப்பதிகரமாக இல்லை" என்றனர்.

பொதுக்குழு விருந்து முடிந்ததும் அ.தி.மு.க-வினர் அங்கிருந்து ஏ.சி பஸ் மூலம் நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பேருந்தில் செல்லும்போதே சசிகலாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட முடிவு குறித்து விவாதம் நடந்துள்ளது. அப்போது, சசிகலாவுக்கு எதிராகத்தான் பெரும்பாலானவர்கள் பேசியுள்ளனர். சசிகலாவுக்கு எதிராக முடிவெடுத்த பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களைச் ஸ்பெஷலாகக் கவனிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான ஏற்பாடுகள் நட்சத்திர ஹோட்டல்களில் தயாராக உள்ளதாம்.

சசிகலாவின் பதவி பறிப்பு எட்டாவது தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு சென்டிமென்ட்டாக சில காரணங்கள் இருப்பதாக அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர்.