Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இலங்கைக் கடற்படை சிறைபிடித்துச் சென்ற மீனவர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

இலங்கைக் கடற்படை சிறை பிடித்துச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் 12 பேரையும் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாக் நீரிணைப் பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வாழ்வாதாரம் பல வகைகளிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ராமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின்  எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. இந்நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற 2 விசைப்படகுகளையும், அதில் சென்ற 12 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் சிறை பிடித்துச் சென்றனர். இதில் ஒரு படகு தடை செய்யப்பட்ட வலையைப் பயன்படுத்தி மீன் பிடிப்பில் ஈடுபட்ட காரணத்தால் ராமேஸ்வரம் மீன் துறையினரால் மீன்பிடி அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகு எனவும் தெரியவந்தது.

ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாலசிங்கம் என்பவருக்குச் சொந்தமான இரு படகுகளில் 12 மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள் நேற்று இரவு பாரம்பர்ய பகுதிகளில் மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் மீனவர்களையும் 2 விசைப்படகுகளையும் சிறை பிடித்துச் சென்றனர். இலங்கை காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்ட மீனவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இன்று காலை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்ற மீனவர்கள்

ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்களை வரும் 26-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க ஊர்காவல்துறை நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஏற்கெனவே தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கைச் சிறையில் இருந்து வருகின்றனர். மேலும், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 180-க்கும் மேற்பட்ட படகுகளும் இலங்கை வசம் பிடித்து வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக் கடற்படையினரின் இந்த தொடர் நடவடிக்கையைத் தடுத்து நிறுத்த மத்திய மாநில அரசுகள் நிரந்தரத் தீர்வு காணவில்லை எனில் ராமேஸ்வரம் தீவிலிருந்து மீனவர்கள் பஞ்சம் பிழைக்க வெளியிடங்களுக்கு செல்லும் அவல நிலை ஏற்படும் என்ற அச்சம் மீனவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close