நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்கக் கூடாது: வி.சி.க வலியுறுத்தல்

'தமிழ்நாட்டில் நவோதயா பள்ளிகளைத் திறக்க வேண்டும்; அதுகுறித்து தமிழக அரசு எட்டு வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்' என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டிருக்கிறது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் கருத்துகள் கூறி வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளது. 

திருமாவளவன்

இதுகுறித்து வி.சி.க வெளியிட்டுள்ள அறிக்கையில், 'நவோதயா பள்ளி திறப்பது குறித்து நீதிமன்றத்தின் உத்தரவு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணை மாநில அரசின் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தில் தலையிடுகிறது. இந்த ஆணையை தமிழக அரசு ஏற்கக் கூடாது. இதை எதிர்த்து உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

நவோதாயா பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்ற திட்டம் 1986-ம் ஆண்டு ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது கொண்டுவரப்பட்டது. அந்தப் பள்ளிகளில் இந்தி கட்டாயம் என்பதால் எம்.ஜி.ஆர் தலைமையிலான அன்றைய தமிழக அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது. கடந்த 30 ஆண்டுகளாக அந்த நிலைதான் நீடித்துவருகிறது. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்திலும் ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் நவோதயா பள்ளிகளைத் தமிழ்நாட்டில் அனுமதிப்பதில்லை என்று உறுதியாக இருந்தனர். அவர்கள் வழியில் நடப்பதாகக் கூறிக்கொள்ளும் இன்றைய அ.தி.மு.க அரசும் அதில் உறுதியாக இருந்து உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும். 

நவோதயா பள்ளிகளைக் கட்டுவதற்கு 30 ஏக்கர் நிலத்தையும் கட்டமைப்பு வசதிகளையும் மாநில அரசுதான் இலவசமாக செய்து தரவேண்டும். ஆறாம் வகுப்பில் சேர்வதற்கே நீட் தேர்வைப் போன்று இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவு தேர்வில் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்தப் பள்ளிகளில் இந்தி என்பது மொழிப் பாடமாக மட்டுமின்றி பயிற்று மொழியாக உள்ளது. இது நேரடியாக இந்தி திணிப்புக்கு வழிகோலுவதாகும். நவோதயா பள்ளிகளால் ஒரு மாநிலத்தின் கல்வித் தரம் உயர்ந்துவிடாது என்பதற்கு அப்பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ள பீகாரும் உத்தரப்பிரதேசமுமே சாட்சி. 

நவோதயா பள்ளிகளை நீதிமன்றத்தின் மூலம் தமிழ்நாட்டின் மீது திணிப்பதற்கு பா.ஜ.க செய்துவரும் முயற்சியை முறியடித்து, தமிழ்நாட்டின் கல்வி காவிமயமாகாமல் தடுப்பதற்குத் தமிழக அரசும் அரசியல் கட்சிகளும்  முன்வரவேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!