கிருஷ்ணர் வேடத்தில் அசத்திய பள்ளிக் குழந்தைகள்!

நாகர்கோவில் கிருஷ்ணசுவாமி கோயிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று இரவு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இன்று காலையில் பள்ளி மாணவ- மாணவிகள் கலந்துகொண்ட கிருஷ்ண ஜெயந்தி ஊர்வலமும் நடைபெற்றது. நாகர்கோவில் கிருஷ்ணசுவாமி கோயில் கிருஷ்ண கோயில் பகுதியில் உள்ளது. இதை குமரி மாவட்ட குருவாயூர் எனவும் பக்தர்கள் அழைக்கிறார்கள். தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கிறார்கள். கேரளாவில் இன்று கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள கோயில்களிலும் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு  கிருஷ்ணசுவாமி கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்களும் கலந்துகொண்டனர். கிருஷ்ணர் வேடமிட்ட குமரி இந்து வித்யாலயா பள்ளி மாணவர்களின் ஊர்வலமும் நடைபெற்றது. வெட்டூர்ணிமடம் வழியாக ஊர்வலம் வந்து கிருஷ்ணன் கோயிலில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் வந்த மாணவ- மாணவிகள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து வந்தனர். அலங்கரிக்கப்பட்ட குதிரையும் முன் வந்தது. இன்று மாலை கிருஷ்ணசுவாமி கோயில் ரத வீதிகளில் திருவிளக்கு பூஜை நடக்கிறது. 4 ரத வீதிகளிலும் ஏராளமான பெண்கள் அமர்ந்து திருவிளக்கு ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். அதன்பின் சமய சொற்பொழி மற்றும் மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. நாளை உறியடி நிகழ்ச்சியும் , பள்ளி மாணவ- மாணவிகளின் பக்தி இன்னிசையும் நடக்கிறது. .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!