ஜாக்டோ - ஜியோ போராட்டம்! திருப்பூரில் 2,500 அரசு ஊழியர்கள் கைது! | Jactto Geo protest - 2500 government staffs arrested

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (12/09/2017)

கடைசி தொடர்பு:18:20 (12/09/2017)

ஜாக்டோ - ஜியோ போராட்டம்! திருப்பூரில் 2,500 அரசு ஊழியர்கள் கைது!

புதிய ஓய்வூதியத்தை ரத்துசெய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தமிழகம் முழுவதும் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு சார்பாக அரசு ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

அதனடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் திருப்பூர், அவிநாசி, காங்கேயம், உடுமலை, தாராபுரம் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களாக திருப்பூர் மாவட்ட ஆட்சியரகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து நடத்தி வரும் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர், தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தின் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் திருப்பூர் - பல்லடம் சாலையில் மிகக் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் போலீஸார் குவிக்கப்பட்டு மறியலில் ஈடுபட்ட ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பைச் சேர்ந்த 1400 பெண்கள் மற்றும் 900 ஆண்கள் என மொத்தம் 2400 பேரை கைதுசெய்து அருகில் உள்ள மண்டபங்களில் தங்கவைத்தனர்.