கேரளாவில் 1,000 கைத்துப்பாக்கிகள், தீவிரவாதிகளுக்கு சப்ளையா?

மகாராஷ்ட்ரா மாநிலத்திலிருந்து கேரளாவுக்கு சுமார் 1,000 கைத்துப்பாக்கிகள் கடத்தப்பட்டுள்ள சம்பவம் கேரள காவல்துறையைப் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடத்தப்பட்ட கைத்துப்பாக்கிகள் தீவிரவாதிகளின் கைகளுக்குச் சென்றுவிட்டதா என்று ராணுவ உளவுப் பிரிவினர் விசாரித்து வருகின்றனர்.

துப்பாக்கிகள் (கோப்புப்படம்)

பீகாரை சேர்ந்த பிரபல ஆயுத வியாபாரி தீபக்குமாரின் உதவியாளர்கள் முகமது ஷாகித் மற்றும் மனோவர் ஆகிய இரண்டு பேரைக் கடத்தி சில நாள்களுக்கு முன் மகாராஷ்ட்ரா போலீஸார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், ஆயுதக் கடத்தல் கும்பல் மூலம் 1,000 கைத்துப்பாக்கிகளை கேரளாவுக்குக் கடத்தியது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் இந்திய ராணுவ உளவுத்துறைக்கு தகவல் கொடுத்தனர். உளவுப் பிரிவினர் கேரள மாநிலத்தில் பல இடங்களில் விசாரணையைத் தொடர்ந்தனர். ஆனாலும், கைத்துப்பாக்கி எங்கு இருக்கிறது என்பதை யாரும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. அதனால் கைத்துப்பாக்கிகள் தீவிரவாதிகளின் கைகளில் சிக்கி இருக்கலாம் அல்லது அவர்களுக்கு சப்ளை செய்யப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் கேரள காவல் துறையையும் உளவுத் துறையையும் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கேரளாவுக்கு கடத்தி வரப்பட்ட கைத்துப்பாக்கிகள் மத்திய பிரதேசம் மாநிலம் சான்துவா பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டவையாம். இவை அதிக திறன் கொண்டவை. இவற்றை ஆயுதக் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் பொம்மை வியாபாரிகள் தோற்றத்தில் கடத்தி இருக்கிறார்கள். துப்பாக்கிக் கடத்தல்காரர்கள் கொச்சியிலுள்ள ஒரு லாட்ஜில் தங்கி இருந்ததும் ராணுவ உளவுத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!