'ஆட்சியைக் கலைக்க ரெடி!'- கர்நாடக ரிசார்ட்டில் கொதித்த எம்.எல்.ஏ-க்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைக் கலைக்க ரெடியாகி விட்டதாக கர்நாடக ரிசார்ட்டில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர்.

அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பார்த்து தினகரன் ஆதரவாளர்கள் ஆத்திரமடைந்துள்ளனர். குறிப்பாக, சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும், அவர் அறிவித்த நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் தினகரனுக்கு சொல்லப்பட்டதும் மீடியாக்களைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தார். அப்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதாக தினகரன் தெரிவித்தார்.

பொதுக்குழுவில் சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படுவதை எதிர்பார்த்த தினகரன் தரப்பு, அதை சட்ட ரீதியாக எதிர்கொள்வது குறித்த ஆலோசனையில் சில நாள்களாக ஈடுபட்டுவருகின்றனர். தீர்மான நகலை வரி விடாமல் படித்த தினகரன் சட்ட நிபுணர்கள், அதுதொடர்பான விவாத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தச்சூழ்நிலையில் புதுச்சேரியில் தங்கியிருந்தால் சிக்கல் எனக்கருதிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள குடகு சொகுசு விடுதியில் தங்கியுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்த இன்று மதியம் கோவை போலீஸார் சொகுசு விடுதிக்குச் சென்றனர். விடுதிக்குள் சென்ற கோவை போலீஸார் எம்.எல்.ஏ-க்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அப்போது, எம்.எல்.ஏ-க்களில் சிலர் போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் போலீஸாரிடம், எங்களது சுயவிருப்பத்தின்பேரிலேயே தங்கியிருக்கிறோம். எங்களை யாரும் கடத்தவில்லை என்றும் சொல்லியுள்ளனர். அந்ததகவலை வீடியோவாகவும் போலீஸார் பதிவுசெய்துள்ளனர்.

இதுகுறித்து கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். "சசிகலாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றிய மகிழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் உள்ளனர். எங்களைப் பொறுத்தவரை, அது பொதுக்குழு கூட்டமே இல்லை. வெறும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அ.தி.மு.க. விதிப்படி செல்லாது. ஏனெனில் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச் செயலாளருக்கு மட்டுமே உள்ளது. டிசம்பரில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில்தான் சசிகலா, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சசிகலாவை ஆதரித்து தேர்தல் ஆணையத்திடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். சசிகலாவின் பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எந்தவித முடிவும் அறிவிக்கவில்லை. அதற்குள் மீண்டும் பொதுக்குழு கூட்டம் நடத்தி சசிகலாவின் நியமனத்தை ரத்து செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தினகரன் தயாராகிவிட்டார். அவரது முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம். ஆட்சியும் அதிகாரமும் இருப்பதால் போலீஸார் மூலம் விசாரணை என்ற பெயரில் எங்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுகின்றன. அந்த மிரட்டல்களுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம். தேவையென்றால் எங்களது எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துவோம். அதன்பிறகு நடக்கும் தேர்தலில் நிச்சயம் எங்களுக்கும் தி.மு.க-வுக்கும் மட்டுமே போட்டியிருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பா.ஜ.க-வுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தால் மக்கள் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவார்கள். தற்போது நடந்துவருவது ஜெயலலிதா விரும்பிய ஆட்சியல்ல. சுயநலத்துக்காக, மக்கள் விரோத ஆட்சி நடந்துவருகிறது. சட்ட ரீதியாக போராடி கட்சியை மீட்டெடுப்போம்" என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!