ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்த வைர வியாபாரியின் மகன்! | Restaurant service guy returns in a Royal way

வெளியிடப்பட்ட நேரம்: 20:28 (12/09/2017)

கடைசி தொடர்பு:21:11 (12/09/2017)

ஹோட்டலில் சர்வராக வேலைபார்த்த வைர வியாபாரியின் மகன்!

திருவனந்தபுரத்தில் `ஸ்ட்ரீட்' என்ற ஹோட்டலில், ஒரு மாதத்துக்கு முன்னர் வேலை கேட்டு வந்தார் 18 வயது இளைஞர் ஒருவர். இவர், அழுக்கு உடையுடன் பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தார். உரிமையாளரின் நண்பர்  சிபாரிசு செய்யவே, அவருக்கு வேலை கிடைத்தது.

வைர வியாபாரி மகள் துருவ்

அந்த இளைஞரின் பெயர் துருவ். வேலையில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்த துருவை, முதலாளிக்கு மிகவும் பிடித்துப்போனது. ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் மிகுந்த அன்புடன் உணவுகளைப் பறிமாறுவார் துருவ். `இவர் கையால் உணவு சாப்பிட்டால், அம்மா கையால் உணவு சாப்பிட்டதுபோல' என வாடிக்கையாளர்கள் உணரத் தொடங்கினர். துருவுக்காகவே `ஸ்ட்ரீட்' ஹோட்டலில் கூட்டம் அதிகமானது. நேரம் காலம் பார்க்காமல் வேலைபார்த்தார் துருவ். முதலாளிக்கோ மிகுந்த மகிழ்ச்சி. துருவைத் தலையில் வைத்துக் கொண்டாடினார். துருவ் கையால் உணவருந்திவிட்டுப் போன பெண் ஒருவர், ஒரு படி மேலே போய், ட்விட்டரிலேயே அவரைப் பாராட்டிப் பதிவிட்டிருந்தார். வேலைக்குச் சேர்ந்த சில நாள்களிலேயே இவ்வளவும் நடந்தன.

கடந்த வாரத்தில் திடீரென உரிமையாளரிடம் சென்ற துருவ், `பாட்டி உடல்நலம் சரியில்லாமல் இருக்கிறார்' என விடுப்புக் கேட்டார். ஓணம் பண்டிகை வேறு நெருங்கிக்கொண்டிருந்தது. உரிமையாளருக்கு அவரை அனுப்ப மனமில்லை. ஆனால், பாட்டிக்கு உடல் நலம் சரியில்லையென்றால் என்ன செய்ய முடியும்? விடுப்பு கொடுத்து அனுப்பினார். துருவ் சென்றுவிட, வாடிக்கையாளர்கள் கூட்டத்தைச் சமாளிக்க முடியவில்லை. வரும் கஸ்டமர்களும் `துருவ் எங்கே... எங்கே?' எனக் கேட்டு நச்சரித்தனர். 

ஹோட்டல் உரிமையாளர் துருவுக்கு போன் செய்தார். உரிமையாளரின் போன் அழைப்பை துருவ் எடுக்கவே இல்லை. பலமுறை முயற்சித்தும் பலனில்லை. `சரி... இனிமேல் துருவ் வர மாட்டார்' என்ற முடிவுக்கு உரிமையாளர் வந்துவிட்டார். கேரளத்தில் ஓணம் பண்டிகை களைகட்டத் தொடங்கியது. எல்லோரும் ஓணத்தில் பிஸியாக இருந்தனர். கொண்டாட்டங்கள், தூள் பறந்துகொண்டிருந்தன. ஓணம் தினத்தன்று, விலை உயர்ந்த லக்ஸஸ் கார் ஒன்று அந்த உணவகம் முன்பு திடீரென வந்து நின்றது. அதிலிருந்து துருவ் பந்தாவாக இறங்கினார். ஆளே அடையாளம் தெரியவில்லை. அழுக்கு உடையுடன் வேலைகேட்டு வந்த துருவ் இப்போது ராயல் லுக்கில்... 

ஹோட்டல் ஊழியர்களுக்கு பரிசு வழங்கிய வைர வியாபாரி மகன்

ஹோட்டல் உரிமையாளர் மற்றும் பணியாளர்களுக்கு ஒரே ஆச்சர்யம்!  ஒன்றும் புரியாமல் தவித்தனர். சிரித்தபடி அவர்களின் தோளில் கைபோட்ட துருவ், சொன்ன விஷயத்தைக் கேட்டு, அங்கு இருந்தவர்கள் மிரண்டுபோனார்கள். `` தான், ஆறு ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புகொண்ட எஸ்.ஆர்.கே நிறுவனத்தின் அதிபர் சாவ்ஜி தோலாக்கியா குடும்பத்தைச் சேர்ந்தவன்'' என துருவ் சொல்ல, சுற்றியிருந்தவர்கள் வாயடைத்துப்போனார்கள். 

எஸ்.ஆர். கே நிறுவனம், இந்தியாவிலேயே வைர ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம். ஒவ்வொரு தீபாவளிக்கும் கார், ஃப்ளாட், வைர நகைகளை போனஸாக வழங்குமே அதே நிறுவனம்தான்.  `கோடீஸ்வர வீட்டுப் பிள்ளையா இங்கே சப்ளையராக வேலைபார்த்ததார்?!' எனச் சுற்றியிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  

ஹோட்டலுக்கு வருகையில் துருவ் வெறுங்கையை வீசிக்கொண்டு வரவில்லை. வைர நகைகள், ரோலக்ஸ் வாட்சுகள் என மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள பரிசுப்பொருள்களை வாங்கி,  தன்னுடன் பணிபுரிந்தவர்களுக்குப் பரிசாக வழங்கி மகிழ்ந்தார். ஹோட்டல் உரிமையாளருக்கும் ஸ்பெஷல் கிஃப்ட் வழங்கி ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். 

வைர வியாபாரிக்கு பாராட்டுகள்

ஊழியர்களுடன் துருவ் எடுத்த புகைப்படத்தை, ஃபேஸ்புக் பக்கத்தில் செய்தியுடன் பகிர்ந்துள்ளது `ஸ்ட்ரீட்' ஹோட்டல் நிர்வாகம். கடந்த ஆண்டு சாவ்ஜி தோலாக்கியாவின் ஒரே மகன் ட்ராவியா தோலாக்கியா, கொச்சி பேக்கரி ஒன்றில் வாழ்க்கை அனுபவத்துக்காகப் பணிபுரிந்தார். ட்ராவியாவுக்கு துருவ், சகோதரர் முறை. 

எதார்த்தம் பழகு!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்