வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (12/09/2017)

கடைசி தொடர்பு:19:45 (12/09/2017)

ஆரணிக்கு கடத்தப்பட்ட சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை... குற்றவாளிகள் கைது!

பாலியல் வன்கொடுமை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக அரசு மருத்துவர் உட்பட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் துப்புரவு பணி செய்துவரும் பெண் ஒருவர் சில தினங்களுக்கு முன் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் அவர், "9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயதான என் மகள் கடந்த மாதம் காணாமல் போய்விட்டாள். அவரை நான் பல இடங்களில் தேடினேன். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு எனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியைச் சேர்ந்த குமார் என்பவர் என் மகளை என்னிடம் ஒப்படைத்தார். அப்போது என்மகள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் அவளிடம் காரணம் விசாரித்தேன். அப்போது ஆரணியைச் சேர்ந்த உறவுக்காரப் பெண்ணான சித்ரா என்பவர் என் மகளிடம் 'வேலை வாங்கித் தருவதாகக் கூறி அங்குள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துள்ளார். பின்பு ஆரணியில் உள்ள அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் என் மகளுக்கு மயக்க ஊசிபோட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்'' எனக் குறிப்பிட்டிருந்தார். 

திருமங்கலம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மல்லிகா ஆகியோர் குற்றவாளிகளைக் கைது செய்ய சென்னை கமிஷனர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து பாலியல் வன்கொடுமையில் இருந்து குழந்தைகளைக் காக்கும் 'பாக்சோ சட்டம்' உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் சித்ரா, கோட்டீஸ்வரி, சுரேஷ் ஆகியோர் தலைமறைவாகினர். பின்னர் நேற்று காலையில் சித்ரா தனது மகன்களுடன் ஆரணி தாலுகா அலுவலகத்துக்கு வந்தார். அப்போது கையில் கொண்டுவந்த மண்ணெண்ணெயைத் தன்மீதும் தன் குழந்தைகளின் மீதும் ஊற்றிக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் சித்ரா. தகவல் அறிந்துவந்த காவல்துறையினர் சித்ராவைக் கைது செய்தனர். அதன்பின்னர் கோட்டீஸ்வரியையும் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சித்ரா, கோட்டீஸ்வரி, சுரேஷ், அரசு மருத்துவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது உதவியாளர் அனைவரும் திருமங்கலம் காவல்நிலையத்துக்கு அழைத்துவரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. 

கைது

இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மல்லிகா நம்மிடம் "இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்துவிட்டோம். டாக்டருக்கும் இந்த வழக்குக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று பாதிக்கப்பட்ட சிறுமி சொல்லிவிட்டார். கைது செய்யப்பட்ட அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருக்கிறோம் தற்போது சிறுமியும், அவரது தாயும் அவர்களது நெருங்கிய உறவினரின் வீட்டில் எங்களது கண்காணிப்பில் இருக்கிறார்கள்" என்று கூறினார்.

இதுபோன்று குழந்தைகளைக் கடத்தி பாலியல் வன்கொடுமைகள் செய்யும் கயவர்களுக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது!