சசிகலாவை நீக்கும் தீர்மானத்தை முன்மொழிந்தவர் இவர்தான்!

சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும் அவர் நியமித்த நியமனங்களையும் ரத்து செய்யும் தீர்மானத்தை ஆர்.வைத்திலிங்கம் எம்.பி முன்மொழிந்துள்ளார். இது, தினகரன் தரப்பினருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சசிகலா

சென்னை வானகரத்தில் இன்று நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியும் அவர் நியமித்த நியமனங்களும் ரத்து என்ற தீர்மானம் 8-வதாக நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானத்தை ஆர்.வைத்திலிங்கம் முன்மொழிந்துள்ளார். அதைப் பொதுக்குழு உறுப்பினர்களும் வழிமொழிந்துள்ளனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் ஓ.பன்னீர்செல்வம் அணி இணைந்த நிகழ்ச்சி கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. அப்போது, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி, பொதுக்குழுவில் பறிக்கப்படும் என்று வைத்திலிங்கம் எம்.பி அறிவித்தார். அதன்படி அவரே சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிப்புத் தீர்மானத்தை முன்மொழிந்துள்ளார். 

சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவி பறிப்பு தீர்மானத்தில், ஜெயலலிதா மரணமடைந்த சூழ்நிலையில் 29.12.2016-ல் அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள வி.கே.சசிகலா, தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்தை ரத்து செய்வதோடு, 30.12.2016 முதல் 15.2.2017 வரை அவர் மேற்கொண்ட நியமனங்கள், நீக்கங்கள், சேர்த்தல்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் செல்லாது என்பதை இந்தப் பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது என்று விரிவாகத் தீர்மானத்தில் சொல்லப்பட்டுள்ளது. சசிகலாவால், எம்.பி. பதவியைப் பெற்ற வைத்திலிங்கம், அவருக்கு எதிராகக் குரல் கொடுத்துள்ளது சசிகலா ஆதரவாளர்கள் மத்தியில் கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!