மதுரையில் களை கட்டும் ஈசல் வியாபாரம்

மதுரை வட்டாரத்தில் தற்போது ஈசல் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. தென் மாவட்டங்களில் ஈசலை விரும்பி உண்போர் அதிகம். ருசியான சத்தான உணவாக ஈசல் கொண்டாடப்படுகிறது. கடந்த சில வருடங்களாக ஈசல் வரத்து மிக குறைந்துவிட்டது. இந்த வருடம் மழை பெய்துள்ளதால் ஈசல் வேட்டை களை கட்டியுள்ளது.

மதுரை அருகேயுள்ள கிராமங்களில் ஈசல் வேட்டைக்கு  இளைஞர்களும், சிறுவர்களும் அதிகாலையில் வயல்வரப்புகளில் சுற்றி வருகிறார்கள்.  சூரியன் உதித்த பின்னர் காற்றில்லாத நேரத்தில் மண்ணுக்குள் இருந்து ஈசல் கிளம்பி, பெரும்படையாக  அந்தப் பகுதியில் பறக்கும்.  ஈசலைப் பிடிக்க  சில நுணுக்கமான வேலைகளைச் செய்கிறார்கள்.  புற்றுக்குழிக்கு அருகிலேயே வலை, பிளாஸ்டிக் பைகளை வைத்து, புற்றிலிருந்து வெளிவரும் ஈசலைப் பிடிக்கிறார்கள்.

ஈசல்வேட்டை

பிறகு அவற்றின் சிறகை நீக்கி  காயவைத்து, தலையை பிரித்துவிட்டு உண்ணுவதற்கேற்ற பகுதியை மட்டும் அரிசியோடு சேர்ந்து வறுத்து சாப்பிடுகிறார்கள். அதிகமாக பிடிபட்டால் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். கிலோ ரூ.200 வரைக்கும் விற்பனையாகிறது. நெல் ஈசல், மாலைக்கண் ஈசல், கொழுந்தீசல், நாய் ஈசல் என பலவகை இருந்தாலும்  நாய் ஈசலைத் தவிர மற்ற அனைத்தும் உண்ண ஏற்றது என்கின்றனர். ஆடி முதல் ஐப்பசி மாதம் வரை கிராமத்து இளைஞர்களுக்கு இது ஜாலியான சைடு பிசினெஸ்ஸாக உள்ளது. உயிர்ப்போடு இருக்கும் மண்ணில்தான் ஈசல் உண்டாகுமாம். நகரங்களில் ஈசல் உருவாவதில்லை. கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களிலும் ஈசல் குறைந்துவிட்டநிலையில் இந்தாண்டு  ஈசல்கள்  பெருகியுள்ளன என்று மகிழ்ச்சியாக சொல்கிறார்கள் கிராமத்து மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!