இணையத்தில் திரைப்படங்களைப் பதிவேற்றும் 'தமிழ்கன்' நிர்வாகி கைது!

 

இந்திய அளவில் வெளியாகும் திரைப்படங்களைச் சட்டத்துக்குப் புறம்பாக இணையதளத்தில் பதிவேற்றும் 'தமிழ்கன்' நிர்வாகியைப் பிடித்த திரைத்துறையினர், அவரைத் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
 

அவர், வேலூர் மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த கௌரிசங்கர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், 100 ஐ.பி முகவரிகள் மூலம் சட்டவிரோதமாக 'தமிழ்கன்' இணையதளத்தில் திரைப்படங்களில் பதிவேற்றி வந்துள்ளார் என்று தெரியவந்துள்ளது. கடந்த 6 மாதங்களாக கௌரி சங்கரை சென்னைக்கு வரவழைக்க திட்டமிட்டு, திரைத்துறையினர் அவரை வசமாகப் பிடித்து திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்நிலையில், காவல்நிலையத்திற்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்ட திரைப்பட சங்க நிர்வாகிகள் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

செய்தியாளர்களை சந்தித்த விஷால்

இந்தக் கைது நடவடிக்கையை அடுத்துத் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும் நடிகர் சங்கப் பொதுச்செயலாளருமான விஷால் திருவல்லிக்கேணி காவல் நிலையத்துக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'இந்தக் கைது தொடர்பாக நாங்கள் காவல்துறையிடம் உரிய முறையில் புகார் கொடுத்துள்ளோம். எனவே, இதுகுறித்து தற்போது என்னால் எதுவும் கூற முடியாது. இதைப் பற்றி அதிகாரபூர்வமாக நான் பேச எனக்கு ஒரு மணி நேரம் அவகாசம் தேவைப்படுகிறது' என்று கூறிவிட்டு காவல் நிலையத்துக்குள் சென்றுவிட்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!