Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சாதி ஒழிப்பு, தமிழ் தேசியம்... திசை திரும்புகிறதா நீட் விவகாரம்!?

“ஊருக்கு ஒரு சேரியும் தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இருக்கிறது” என்று இயக்குநர் பா.ரஞ்சித் வெடித்துக் குமுறிய வார்த்தைகள் இணையத்தின் வைரலாகியிருக்கிறது. 

நீட் தேர்வு பிரச்னையில், அனிதா தற்கொலை துயரத்தை அடுத்து சென்னையில் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள் மற்றும் உதவி இயக்குநர்கள் சார்பில் 'மாணவி அனிதாவுக்காக உரிமையேந்தல்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இயக்குநர் அமீர், ''இங்கே நாம் அனைவரும் சாதி, மதங்களைக் கடந்து சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காகக் கூடியிருக்கிறோம்'' என்ற கருத்தைத் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்டுப் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், ''தமிழ்நாட்டில் ஊருக்கு ஒரு சேரியும் தெருவுக்கு ஒரு சாதியும் இன்னும் இங்கே இருக்கத்தான் செய்கிறது. இப்படியொரு சூழலில், சாதியை ஒழிக்காமல் தமிழ்த் தேசியம் என்று நாம் ஒன்றுபடவோ, சாதிக்கவோ வழியே இல்லை'' என்று ஆவேசமாக தனது கருத்தை எடுத்துவைத்தார். 

நீட்

அரங்கில் அனலைக் கிளப்பிய இவ்விவகாரத்துக்குப் பதிலடியாக நாம் தமிழர் கட்சி சார்பில், சீமான் மேடைகளில் முழங்கினார். இதைத்தொடர்ந்து, 'பா.ரஞ்சித் பேசியது சரியா, சீமான் பதிலடி' என்ற கோணத்தில் தொடர்ச்சியாக இணையத்தில் இவ்விஷயம் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இவ்விவகாரம் குறித்து தமிழ் ஆர்வலர்களிடம் பேசினோம்.

'தமிழ் தேசிய விடுதலை இயக்க'த்தைச் சேர்ந்த மூத்த தலைவர் தோழர் தியாகு இதுகுறித்துப் பேசும்போது, “தலித் என்று அடையாளப்படுத்துவது தமிழ் அடையாளத்தை மறுப்பதும் அல்ல; தமிழ் அடையாளத்துக்கு முன்பு தலித் அடையாளத்தை மறுப்பதும் கவலைப்பட வேண்டிய ஒன்றும் அல்ல. ஏனெனில், தலித் என்பது குறிப்பிட்ட ஒரு சாதி அடையாளமல்ல. அது சாதி மறுப்பின் அடையாளம். மற்ற சாதியை எல்லாம் அமைப்பாகத் திரட்டினீர்கள் என்றால், அவர்கள் தங்கள் சாதியைக் காப்பாற்றுவதற்காக ஒன்று சேர்வார்கள். ஆனால், தலித்துகளை நீங்கள் அமைப்பாக ஒன்றுதிரட்டினால், அவர்கள் சாதி ஒழிப்புக்காகத்தான் ஒன்றுசேர முடியும். எவனொருவனும் தலித்துகளை சாதியைக் காப்பாற்றுவதற்கோ பாதுகாப்பதற்கோ அணி திரட்ட முடியாது. ஏனென்றால், அவர்களது வாழ்வியலே, 'சாதி ஒழிப்பில்'தான் அடங்கியிருக்கிறது. 

தோழர் தியாகு

‘தலித்' என்பது அடங்கிப்போவதை மட்டுமல்லாமல், அதனை எதிர்ப்பது என்பதையும் சேர்த்துக் குறிக்கிற ஒரு 'கலகச் சொல்'லாகத்தான் இருக்கிறது. எனவே, இது ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல. 

சாதிய ஒடுக்குமுறை, தேசிய ஒடுக்குமுறை என இங்கே இரண்டு விதமான ஒடுக்குமுறைகள் இருக்கின்றன. இந்த இரண்டு ஒடுக்குமுறையும் சேர்ந்துதான் அனிதாவுக்கு இப்படியொரு நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இந்த இரண்டையும் ஒன்றுக்கொன்று போட்டியாகவோ எதிராகவோ கருதாமல், இரண்டையும் வலியுறுத்துவது அவசியம். 

'உன்னை நான் தொடமாட்டேன்; உனக்கு நான் தண்ணீர் கொடுக்கமாட்டேன். ஆனால், நானும் தமிழன்; நீயும் தமிழன்' என்று சொல்லிக்கொண்டு போராட முடியுமா என்றால், ஒருநாளும் அது முடியாது. அதனால், சாதி மறுப்பு என்பது இங்கே அவசியம். அதேசமயம், சாதி மறுப்பு என்பது சாதி ஒழிப்பாகவே வளர வேண்டுமானால், அது இவர்களின் மனதிலும் பழக்க வழக்கங்களிலும் மட்டுமே இல்லை... அது சமூகம், பொருளாதாரம், அரசு என எல்லாவற்றிலும் தொடர்பு உடையது. ஆக, இப்படி எல்லா தளங்களிலும் ஒரு மாற்றம் கொண்டுவர வேண்டுமானால், அதற்கு 'தமிழ்த் தேசிய விடுதலை' அவசியம். எனவே, சாதியை மறுக்காமல், தமிழ்த் தேசியத்துக்காகப் போராட முடியாது. தமிழ்த் தேசிய விடுதலை இல்லாமல், சாதியை ஒழிக்கமுடியாது என்பதுதான் என் கருத்து.'' என்றார். 

'தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி'த் தலைவர் பெ.மணியரசன், ''எங்களை இந்தியன் என்று சொல்லாதீர்கள் 'தலித்' என்று சொல்லுங்கள் என காங்கிரஸாரிடமோ அல்லது பி.ஜே.பி-யினரிடமோ ரஞ்சித் கேட்பாரா? 'திராவிடன்' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே, வெண்மணிப்படுகொலை நடக்கிறது, தெருவுக்கு நடுவே சுவர் கட்டப்படுகிறது... அப்போதெல்லாம், 'எங்களைப் பார்த்து திராவிடன் என்று சொல்லாதீர்கள்' என்று தி.மு.க-வினரைப் பார்த்துக் கேட்டிருக்கிறாரா? தமிழன் என்றால் மட்டும் ஏன் எதிர்க்கிறார்?

ரஞ்சித்தினுடைய தாய்மொழியும் என்னுடைய தாய்மொழியும் தமிழ்தான்! சாதி என்பது தமிழர்களிடையே பிற்காலத்தில் வந்த ஒரு சீர்குலைவு. ஆரிய உபநிடதங்களும் வேதங்களும்தான் இந்த வர்ணாசிரம பாகுபாபாடுகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணம். பாமர மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் இப்போது 'இந்து' என்ற ஒற்றைச் சொல்லில் ஒருசேரச் சொல்லி ஏமாற்றிவருகிறார்கள். அது இந்துத்துவா அல்ல... ஆரியத்துவா என்று நாங்கள்தான் மக்களிடையே எடுத்துச் சொல்லிவருகிறோம். பெரியார் பெயரைச் சொல்லி தமிழ்நாட்டில் கட்சி வளர்த்தவர்கள்தான் எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர், வட்ட செயலாளர் என்று எல்லா பதவிகளையும் சாதி பார்த்தே கொடுக்கிறார்கள். 

பெ.மணியரசன்

நாமெல்லாம் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள்தான். உனக்கும் எனக்கும் மூல பேராசான் திருவள்ளுவர்தான். நமது தாய் மண் தமிழகம் என்பதையெல்லாம் நாங்கள்தான் எடுத்துச்சொல்லி வருகிறோம். 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று நாமெல்லோரும் ஒன்றாக இருந்ததற்கான சான்றுகள் தமிழ் இலக்கியத்தில் இருக்கின்றன. 

மனதில் அழுக்கில்லாமல் இருத்தல், மனிதர்கள் அனைவரும் சமம், தமிழர்கள் அனைவரும் சமம் என்ற மூன்று தமிழர் அறத்தைத்தான் நாங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.  மனிதர்கள் அனைவரும் சமம் என்று சொல்வதில், ஆண் - பெண்ணும் சமம் என்ற அர்த்தம் உள்ளடங்கியிருக்கிறது. அதனால்தான் சங்க இலக்கியத்திலேயே தலைவன் - தலைவி என்று வர்ணித்தார்கள். குடும்ப நலத்தைக்கூட 'இல்லறம்' என்று அறத்தோடு சேர்த்து வலியுறுத்திய இலக்கியம் தமிழைத் தவிர வேறு உலக மொழிகள் எவற்றிலாவது உண்டா? ஆக, இப்படியெல்லாம் சமமாக உரிமையோடு வாழ்ந்தவர்களின் வழித்தோன்றல்கள்தான் நாம் எல்லோரும். அந்த சமநிலையை மறுபடியும் மீட்டெடுக்கவேண்டுமானால், இடையில் ஏற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர், பிற்படுத்தப்பட்டவர் என்ற வேறுபாட்டையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு நாமெல்லோரும் தமிழராய் ஒன்றுபட வேண்டியது அவசியம் என்பதைத்தான் நாங்கள் தெளிவாக வலியுறுத்திவருகிறோம். எத்தனை சாதிக் கிளைகளாக இன்று நாம் பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அடிமரத்து வேர் என்பது நமக்கு தமிழ்தான். இதுதான் நம்மை உளவியல் ரீதியாக ஒன்றிணைக்கும். 

தொழிற்சாலைகளை எல்லாம் அரசுடைமையாக்கிவிட்டால், முதலாளித்துவத்தை ஒழித்துவிடலாம். நிலத்தையெல்லாம் கையகப்படுத்தி கூட்டுப் பண்ணைகளை உருவாக்கிவிட்டால், நிலப் பிரபுத்துவத்தை ஒழித்துவிடலாம். ஆனால், எதை எடுத்து சாதியை ஒழிப்பீர்கள்? அதற்கு மனதளவில் அல்லவா மெள்ள மெள்ள மாற்றம் வரவேண்டும்; வாழ்வுரிமையில் சமத்துவம் வரவேண்டும். இப்படி ஒவ்வொன்றாக உதிர்ந்துபோகக்கூடியதுதான் சாதி என்றக் கட்டமைப்பு. மற்றபடி உடனடியாக, நம்மிடையே இருக்கும் சாதி அழுக்கை ஒரே நாளில், தேதி குறித்து களைந்துவிட முடியாது. எனவே, சாதி ஒழிப்புக்கான  பண்பாட்டு மாற்றங்கள், போராட்டங்களை எங்களது தமிழ்த் தேசியம்தான் செய்துகொண்டிருக்கிறது'' என்றார் உறுதியான குரலில்.

சுபவீ

'திராவிட இயக்கத் தமிழர் பேரவை' பொதுச்செயலாளர் சுபவீ இதுகுறித்துப் பேசும்போது, ''ரஞ்சித் பேசியது முற்றிலும் உண்மை. தமிழ்ச் சமூகம் ஒரு சாதிய சமூகம்தான். ஆனால், அதை இப்போது உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தால், அனிதா விஷயம் பின்னுக்குப் போய்விடும். இப்போதே, இந்த விவாதம் 'நீட் பிரச்னை'யிலிருந்து 'தலித் பிரச்னை'யாக மாறிவருகிறது. அனிதாவைப் பின்னுக்குத் தள்ளி ரஞ்சித் முன்னுக்கு வருவது திசை திருப்புதலாகிவிடுகிறது. இன்றைக்கு மாணவ சமுதாயம் அனிதாவுக்கு ஆதரவாக இருக்கிறது. அதனால் அனிதா பற்றியும் நீட் பற்றியும் நாம் பேசலாமே...

மற்றபடி ரஞ்சித் பேசியதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், நீட் பிரச்னையைப் பேச வேண்டிய இடத்தில், தலித் பிரச்னையைப் பேசவேண்டுமா என்ற கேள்வி எழுகிறது. ஆக, அனிதா பற்றியும் நீட் பற்றியும் பேசாமல், பாப்புலராக இருக்கக்கூடிய ரஞ்சித் பற்றியே நாமும் பேசினால்... மீண்டும் விவாதம் முழுவதும் ரஞ்சித் நோக்கியேத் திரும்பும். அதனால், இதற்கு நாமும் பலியாகிவிட வேண்டாம் என்று கருதுகிறேன்'' என்றார் அழுத்தமாக.

சூழ்ச்சிகளை இனம் கண்டு அதற்கு எதிராக மக்களின் புரட்சிப் போராட்டம் வெடித்துவரும் சூழல்களில், அதிகார வர்க்கங்களின் 'திசை திருப்புதல்' உத்தியும் ஒருசேர அரங்கேற்றப்படும் என்பதுதான் கடந்தகால வரலாறு. நீட் விஷயத்தில் நாம் விழிப்பு உணர்வோடு செயல்படுவதுதான் தமிழகத்தின் தற்போதைய அவசியம்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close