பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வலியுறுத்திப் பெற்றோர்கள் போராட்டம்..! | Parents protest against government school management in Coimbatore

வெளியிடப்பட்ட நேரம்: 22:50 (12/09/2017)

கடைசி தொடர்பு:09:36 (13/09/2017)

பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வலியுறுத்திப் பெற்றோர்கள் போராட்டம்..!

அவிநாசி அருகே, இடிந்துவிழும் அபாயத்தில் இருந்த தொடக்கப் பள்ளிக் கட்டடத்தைச் சீரமைக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர்.

அவிநாசி அருகே அமைந்துள்ள புதுநல்லூர் பகுதியில், கடந்த 1993-ம் ஆண்டு கட்டப்பட்டது அரசுத் தொடக்கப் பள்ளி. 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட  நான்கு பேர் பணிபுரிந்துவருகின்றனர். இப்பள்ளியில், மொத்தமே இரண்டு வகுப்பறைகள் மட்டும் இருக்கின்ற சூழலில், 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களை இருக்கின்ற இரண்டு வகுப்பறைகளிலும் பிரித்துதான் உட்காரவைத்திருக்கிறது பள்ளி நிர்வாகம்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்த கனமழையால், இப்பள்ளியின் கட்டடம் மழைநீரில் ஊறிப்போய், விரிசல் ஏற்பட்டிருக்கிறது. மேலும், பள்ளியின் ஒருபகுதி மேற்கூரையும் சிதிலமடைந்து காணப்பட்டிருக்கிறது. இன்று வழக்கம்போல பள்ளியில் தங்களின் பிள்ளைகளைவிட பெற்றோர்கள் வந்திருந்த சமயத்தில், பள்ளிக் கட்டடத்தின் முகப்புப் பகுதி லேசாக சரிந்துவிழத் தொடங்கியிருக்கிறது. இதைக்கண்டு அச்சமடைந்த பெற்றோர்கள், ''இடிந்துவிழும் அபாயத்தில் உள்ள இந்தப் பள்ளியின் கட்டடத்தில் எங்கள் பிள்ளைகளை அமரவைக்க முடியாது'' என்றுகூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், சம்பவ இடத்துக்கு வந்த அவிநாசிப் பகுதி காவல்துறையினர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் போராட்டம் நடத்திய பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நாளைக்குள் விரிசல் அடைந்த பகுதியைச் சீரமைத்துச் செப்பனிடுவதாக உறுதியளித்த பின்னரே போராட்டம் முடிவுக்கு வந்தது.