’ஆட்சிக்கு ஈ.பி.எஸ்... கட்சிக்கு ஓ.பி.எஸ்’: கோவில்பட்டியில் இல.கணேசன் பேச்சு

’ஆட்சிக்கு ஈ.பி.எஸ். கட்சிக்கு ஓ.பி.எஸ் அவர்களுக்கு வாழ்த்துகள். அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை பா.ஜ.க வரவேற்கிறது’ எனக் கோவில்பட்டியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பா.ஜ.க மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான இல.கணேசன் தெரிவித்துள்ளார்.

பாரதியாரின் நினைவுதினமான இன்று தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதி மணிமண்டபத்தில் பொற்றாமரை இலக்கிய அமைப்பு சார்பில், நடைபெற்ற பாரதியார் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கோவில்பட்டிக்கு வருகை தந்த இல.கணேசன் செய்தியாளர்களிடம், ‘ அ.தி.மு.க பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அனைத்துமே வரவேற்கத்தக்கது. இத்தீர்மானங்கள் ஆறுதலை அளிக்கிறது. பா.ஜ.க சார்பில் இந்தத் தீர்மானங்களை வரவேற்கிறேன். அ.தி.மு.க கட்சியை ஒருங்கிணைக்க ஓ.பி.எஸ் உள்ளார். தமிழக ஆட்சியை கவனிக்க ஈ.பி.எஸ் உள்ளார். கட்சியையும், ஆட்சியையும்  வழிநடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள். அ.தி.மு.க-வில் எந்தவொரு பொறுப்பிலும் இல்லாத தினகரன் கட்சியில் உரிமை கேட்பது தவறு. கட்சியைப் பிளவுபடுத்த நினைக்கும் தினகரனின் செயல் கண்டிக்கத்தக்கது. தினகரன் தரப்பினர் அவர்களின்  பிரச்னைகளை நீதிமன்றம் மூலம்  தீர்த்துக்கொள்ள வேண்டும்.

கோவில்பட்டியில் இல.கணேசன் பத்திரிக்கையாளர் சந்திப்பு

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளிகள் தொடங்கலாம் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தைத் தவிர மற்ற மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இப்பள்ளிகளை அமைக்க தேவையான இடவசதியைத் தமிழக அரசு வழங்கிட வேண்டும். அரசு இதை ஒரு கெளரவப் பிரச்னையாக எடுத்துக் கொள்ளாமல் நீதிமன்ற உத்தரவுப்படி இப்பள்ளிகளைத் தொடங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால் குறைந்த கல்விக்கட்டணத்தில் கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்கும். மத்தியரசு கல்வியைக் கொண்டு செயல்பட்டு வரும் கல்வி நிறுவனங்களில் இந்தி கற்பிக்கப்படுகிறது. எனவே, நவோதய பள்ளிகள் தொடங்கப்பட வேண்டும்.

அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தில் உரிய நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும். அம்மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டியவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தேவைப்பட்டால் சி.பி.ஐ விசாரணைக்கும் உத்தரவிடவேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். நீட் தேர்வு மற்றும் மாணவி அனிதாவின் இறப்பைக் காரணமாக வைத்துக்கொண்டு தங்களின் சுயலாபத்திற்காக சில கட்சிகள் அரசியல் செய்கின்றன.’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!