எடப்பாடி பழனிசாமி, திண்டுக்கல் சீனிவாசனின் பதவிகளை நள்ளிரவில் பறித்த தினகரன்!

கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியும், பொருளாளர் பொறுப்பிலிருந்து திண்டுக்கல் சீனிவாசனும் நீக்கப்படுவதாக, அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். 

டி.டி.வி.தினகரன்


முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரது அணிகள் இணைந்து, சென்னையை அடுத்த வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டினர். இந்தக் கூட்டத்தில், சசிகலாவின் நியமனம் ரத்து, பொதுச் செயலாளருக்கான அதிகாரங்களை ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அளிப்பது உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொதுக்குழுவில் பேசிய எடப்பாடி பழனிசாமி, தினகரனுக்கு எதிராகச் சீறினார். அவர் பேசுகையில், ‘ கடந்த 10 ஆண்டுகளாக தினகரன் எங்கிருந்தார்?. துரோகம் இழைத்ததால் கட்சியிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன், எங்களைத் துரோகிகள் என்பதா? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார். பொதுக்குழுக் கூட்டம் தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், ’நடைபெற்றது பொதுக்குழுக் கூட்டம் அல்ல; பொதுக்கூட்டம்தான்’ என்றார்.

இந்த நிலையில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்குவதாகவும், அந்தப் பொறுப்பில் பாப்பிரெட்டிபட்டி தொகுதி எம்.எல்.ஏ. பழனியப்பனை நியமிப்பதாகவும் தினகரன் அறிவித்துள்ளார். அதேபோல, கட்சியின் பொருளாளர் பதவியிலிருந்து திண்டுக்கல் சீனிவாசனை நீக்கி, அந்தப் பொறுப்புக்கு தனது ஆதரவாளரான, தஞ்சாவூர் தொகுதி எம்.எல்.ஏ., ரெங்கசாமியை நியமிப்பதாகவும் தினகரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். சேலம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நீக்கப்படுவதாக தினகரன் சமீபத்தில் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!