காஜல் அகர்வால் புகைப்படத்துடன் ஸ்மார்ட் ரேஷன் கார்டு!

ஓமலூர் அருகே, பெண் ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில், நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழகத்தில், காகிதத்தால் ஆன குடும்ப அட்டைகள் கடந்த 2005-ம் ஆண்டு வழங்கப்பட்டன. அவை, 2010-ம் ஆண்டு புதுப்பித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 2010-ல் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படவில்லை. அதன்பின்னர், 2014-ம் ஆண்டு ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், அவை அறிவிப்புகளாகவே இருந்துவிட்டன. புதிய குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, ஏற்கெனவே உள்ள குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டப்பட்டுவருகிறது. எட்டு ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின், கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுவருகின்றன. அதிலும், முறையான திட்டமிடல் இல்லாததால், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வழங்குவதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுவருவதாகப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். 

இந்த நிலையில், ஓமலூர் அருகே செட்டிபட்டி பகுதியில், பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் ரேஷன் கார்டில், அவரது புகைப்படத்துக்குப் பதிலாக, நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அச்சடிக்கும் இடத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் இந்தத் தவறு நிகழ்ந்திருக்கலாம் என்றும், இ-சேவை மையத்தில் கொடுத்து புகைப்படத்தை மாற்றிக்கொள்ளலாம் என்றும் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!