வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் குவியும் பறவைகள்! | Hundreds of migratory birds from European and north Asian countries camp at vettangudi bird sanctuary

வெளியிடப்பட்ட நேரம்: 10:20 (13/09/2017)

கடைசி தொடர்பு:10:20 (13/09/2017)

வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் குவியும் பறவைகள்!

சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் வெளிநாட்டுப் பறவைகள் குவிவதால், சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

 

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கொள்ளுகுடிப்பட்டி கண்மாயில், சுமார் 38.4 ஏக்கர் பரப்பளவில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால், பசுமையாக இயற்கை எழிலுடன் காணப்படுகிறது. ஆண்டுதோறும் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் தமிழக நீர்நிலைகளை நாடி லட்சக்கணக்கான பறவைகள் இங்கு வருகை தருகின்றன. இனப்பெருக்கம் முடிந்து, ஏப்ரல்-மே மாதங்களில் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் செல்கின்றன.

உண்ணிகொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பல் நிற நாரை, பாம்புதாரா, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொத்திநாரை போன்ற 217 வகையான சுமார் 8,000 வெளிநாட்டுப் பறவைகள், மழைக்காலத்தில் இங்கு வருகின்றன. கடந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், தாமதமாக வந்த பறவைகளும் டிசம்பா் மாதத்திலேயே தமது இருப்பிடத்துக்குச் சென்றுவிட்டன. சமீபத்தில் பெய்த தென்மேற்குப் பருவமழையால் குளங்கள், கண்மாய்களில் நீா் வரத்து அதிகமானதால், இம்மாத தொடக்கத்திலிருந்தே இங்கு  நாள்தோறும் பறவைகள் வந்து குவியத் தொடங்கியுள்ளன.

இதனால், இந்த ஆண்டு மழை அதிகமாகப் பெய்து விவசாயம் செழிக்கும் என்று கொள்ளுகுடிப்பட்டி கிராம மக்கள் வயல்களில் விவசாயப் பணிகளைத் தொடங்கிவிட்டனா். விதவிதமான பறவைகள், காலையில் இரை தேடிச் சென்று, மாலையில் சரணாலயத்தில் வந்து கூடுகட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன. கிராம மக்கள், தீபாவளி மட்டுமல்லாது எந்த நிகழ்ச்சிக்கும் வெடி வெடிப்பதில்லை. பறவைகளுக்காகத் தங்களின் மகிழ்ச்சியைத் தியாகம்செய்துவருகிறார்கள். இவர்களைப் பாராட்டி, வனத்துறை ஒவ்வோர் ஆண்டு தீபாவளிக்கும் இனிப்புகள் வழங்கிவருகிறது.

இந்தப் பறவைகளைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு, தொலைநோக்கி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும், வேட்டங்குடி பறவைகள் சரணாலயம்குறித்து வனத்துறை, சுற்றுலாத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் விளம்பரப்படுத்தி, சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்து கண்டுகளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க