தொடரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு! - விவசாயிகள் மகிழ்ச்சி

அருவி

நெல்லை மாவட்டத்தில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகளுக்குத் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. மலைப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் கடந்த இரு தினங்களில் 8 அடி அதிகரித்து இருக்கிறது. பாபநாசம் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு வாரங்களாகப் பெய்யும் மழை காரணமாக குற்றாலம் அருவிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து இருக்கிறது. குற்றாலத்தில் சீசன் முடிவடைந்த பின்னரும் தற்போது அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. ஐந்தருவியில் அனைத்துக் கிளைகளிலும் தண்ணீர் விழுகிறது. மெயின் அருவியிலும் தண்ணீர் அதிகமாக விழுகிறது. தற்போது சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் கூட்ட நெருக்கடி இல்லாமல் நீண்ட நேரம் குளித்து மகிழ்கின்றனர். குளிர்ந்த காற்றும் சாரலும் அடிப்பதால் குற்றாலம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் இதமான சீதோஷ்ணநிலை நிலவுகிறது.

அணை நீர்மட்டம்

நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம் அணையில் இன்று காலை நிலவரப்படி 71.40 அடி நீர் இருப்பு உள்ளது. இந்த அணையின் கொள்ளளவு 143 அடியாக உள்ள நிலையில் தற்போது, 1682 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதியில் பெய்யும் மழையின் காரணமாக அணைக்கு 144 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 156 அடி கொள்ளளவு கொண்ட சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 54 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 132.70 மில்லியன் கனஅடி நீர் இருப்பு உள்ள நிலையில் அணைக்கு வினாடிக்கு 218 கனஅடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. 

118 அடி கொள்ளளவு கொண்ட மணிமுத்தாறு அணையில் 36.55 அடி நீர் மட்டம் உள்ளது அணைக்கு 280 கனஅடி நீர்வரத்து உள்ளது.  தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை மற்றும் அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு ஆகியவை விவசாயிகளை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!