முதல்வருக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது. 

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் சந்தித்தது, அரசு நிர்வாகம் தொடர்பாக ஆலோசனைகள் நடத்தியதாக, விருதுநகரைச் சேர்ந்த ஆணழகன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த ஒருவரிடம் அரசு நிர்வாகம் குறித்து முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தியதாகவும், எனவே அவர்களைத் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட வேண்டும் என்றும் மனுத்தாக்கல் செய்திருந்தார். மேலும், அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளராக இருக்கும் கௌரிசங்கர், சசிகலாவின் வழிகாட்டுதலின்படியே ஆட்சி நடைபெறுவதாக ஊடகங்களுக்கு அளித்த பேட்டியையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில், முதலமைச்சர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், ரகசியக் காப்பு மற்றும் அரசியலமைப்புக்கு எதிராகச் செயல்படவில்லை என்றும், செய்தித் தொடர்பாளர் கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுவில், சசிகலாவைத் தங்களுக்கு நீண்ட நாட்களாகத் தெரியும் என்றும், அவரது உடல்நிலைகுறித்து விசாரிக்கவே சிறையில் சந்தித்ததாகவும் கூறப்பட்டது. மேலும், அரசு நிர்வாகம் தொடர்பாக அவரிடம் ஆலோசிக்கவில்லை என்றும் அமைச்சர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த மனுக்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், வழக்கை முடித்துவைப்பதாக அறிவித்தது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!