வதந்திகளைப் பரப்ப பா.ஜ.க-வில் தனி டீம்..! கொதிக்கும் ஜோதிமணி

சமூக வலைதளங்கள் மூலம் தங்களுக்கு எதிரான சித்தாத்தங்கள் கொண்டவர்கள் குறித்து போலியான கருத்துகளை பா.ஜ.க-வைச் சேர்ந்த ஐ.டி விங் பரப்பிவருகிறது என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். 

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதிமணி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். அவர், பா.ஜ.க அரசுக்கு எதிராகவும், அதன் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக பொதுத் தளத்தில் தொடர்ச்சியாக குரல் கொடுத்துவருகிறார். அவர், கடந்த வருடம் தனக்கு தொலைபேசி வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் தொடர்ச்சியாக பாலியல் மிரட்டல்கள் வருகின்றன என்று காவல்துறையில் புகார் அளித்திருந்தார். அதற்கு பா.ஜ.க தான் காரணம் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

அந்த நேரத்தில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று அவருடைய ட்விட்டர் பக்கத்தில், 'என்னுடைய பெயரில் ட்விட்டரில் இந்துக்கடவுளுக்கு எதிராக பதிவிட்டது போல வாட்ஸ்அப்பில் ஒரு படம் உலாவருகிறது. இந்துக் கடவுள்களை அவமதிக்கும் செயலில் பா.ஜ.கவே ஈடுபடுகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து ஜோதிமணியை தொடர்புகொண்டபோது, "சமூக வலைதளங்களில் பா.ஜ.க-வுக்கு எதிரான சிந்தாந்தங்களைக் கொண்டவர்களைப் பற்றி தவறான கருத்துகளைப் பரப்புவதை பா.ஜ.க ஐ.டி விங் தொடர்ச்சியாக செய்துவருகிறது. இதற்காக, 1,000-க்கும் மேற்பட்டோரை பணம் கொடுத்து பா.ஜ.க மேலிடம் வேலைக்கு அமர்த்தியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தியும் ஏற்கெனவே குற்றம்சாட்டியுள்ளார். பா.ஜ.க-வினர், என்னை மட்டுமல்ல, அவர்களுக்கு எதிரான சித்தாந்தங்களைக் கொண்ட பத்திரிக்கையாளர்கள், இடதுசாரிகள் ஆகியோர் குறித்தும் தவறான கருத்துகளைப் பரப்பிவருகின்றனர். போட்டோஷாப் மூலம் உருவாக்கப்படும் போட்டோக்களையும், தவறான செய்திகளை உருவாக்கியும் அதை பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப் ஆகிய சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். அவர்களுடைய போலி பரப்புதலை மக்களிடம் அம்பலப்படுத்தவேண்டியது தற்போது அவசியமாகிறது' என்று தெரிவித்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!