Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'சசிகலா கொடுத்தார்... பழனிசாமி பறித்தார்!' - குமுறலில் மூன்று அமைச்சர்கள்

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சசிகலா கொடுத்த கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்ட அ.தி.மு.க-வினர் வருத்தத்தில் உள்ளனர். குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையனின் அவைத் தலைவர் பதவியும் திண்டுக்கல் சீனிவாசனின் பொருளாளர் பதவியும் அமைச்சர் ஜெயக்குமாரின் மாநில மீனவரணி செயலாளர் பதவியும் பறிபோகின்றன. இதுதவிர பதவிகள் பறிப்போகும் அ.தி.மு.க. நிர்வாகிகளும் மனக்குமுறலில் உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய தரப்பினர் நடத்திய பொதுக்குழுவில் சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவி பறிக்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், 29.12.2016ல் கட்சியின் தற்காலிக பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சசிகலாவின் பதவி பறிக்கப்படுவதாகவும், அவரால் கட்சியில் நியமிக்கப்பட்ட, நீக்கப்பட்டவர்களின் பதவி செல்லாது என்றும் தீர்மானத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. சசிகலாவுக்கும் தினகரனுக்கும் எதிரான தீர்மானத்தை வைத்திலிங்கம் எம்.பி. முன்மொழிந்ததும் பொதுக்குழு அரங்கமே கைத்தட்டலில் அதிர்ந்துள்ளது. மேலும், பெரும்பாலான பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றதால் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உள்ளனர்.

சசிகலாவுக்கு எதிரான தீர்மானத்தில் தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அடுத்த நாளான 30.12.2016 முதல் 15.2.2017 வரை சசிகலா எடுத்த நடவடிக்கைகள் செல்லாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சசிகலாவால் நீக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் அவரால் நியமிக்கப்பட்டவர்கள் வருத்தத்தில் உள்ளனர். சசிகலா, பொதுச் செயலாளரானதும், அ.தி.மு.க-விலிருந்து தென்சென்னையைச் சேர்ந்த விஜய்கார்த்திக் என்கிற ஜெ.எம்.பஷீரை கடந்த ஜனவரியில் நீக்கினார். இவரது நீக்கத்துக்கு கார் வழக்கில் கைதுசெய்யப்பட்டதே காரணமாகச் சொல்லப்பட்டது. அடுத்து, சசிகலாவுடன் ஏற்பட்ட மோதலால் அ.தி.மு.க-வில் தனி அணியை ஏற்படுத்திய ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை சசிகலா நீக்கினார். நீக்கப்பட்டவர்களுக்குப்பதிலாக தனக்கு வேண்டப்பட்டவர்களை கட்சிப் பதவிகளில் சசிகலா நியமித்தார்.

குறிப்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் பொருளாளர் பதவி, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும், மதுசூதனனின் அவைத் தலைவர் பதவி செங்கோட்டையனுக்கும் கொடுக்கப்பட்டது. மாநில மீனவரணிச் செயலாளராக இருந்த முன்னாள் கவுன்சிலர் நீலாங்கரை முனுசாமியின் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் ஜெயக்குமாருக்கு வழங்கப்பட்டது. இதனால், அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு சசிகலா வழங்கிய கட்சிப்பதவிகள் பறிபோகும். ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட நியமனங்கள் செல்லும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் மதுசூதனன், அவைத் தலைவராகவும், ஓ.பன்னீர்செல்வம், பொருளாளராகவும் தொடர வாய்ப்புள்ளது.

பொதுக்குழு முடிந்தவுடன் பதவிகள் பறிபோனவர்கள் தங்களின் மனக்குமுறல்களை ஆதரவாளர்களிடம் வெளிப்படுத்தியுள்ளனர். இந்த தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் தெரிந்ததும் பொதுக்குழுவின் தீர்மானத்தை தேர்தல் ஆணையம் ஏற்று, கட்சியின் சின்னம் மீட்கப்பட்டவுடன் உங்களுக்கெல்லாம் இதைவிட நல்ல பதவிகள் கட்சியில் கொடுக்கப்படும். அதுதவிர சசிகலாவால் நீக்கப்பட்டவர்களுக்கும் கட்சியில் முக்கியத்துவம் கொடுப்போம் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து, சசிகலாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள், தங்களுக்கும் முக்கியத்தும் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடமும் துணை முதல்வரிடமும் வைத்துள்ளனர். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலிருந்து உறுதிமொழி கொடுக்கப்பட்டுள்ளதாம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

 சசிகலாவால் நீக்கம் செய்யப்பட்ட முதல் நபரான ஜெ.எம்.பஷீரும், கட்சியில் தனக்கு மாநில அளவில் பதவி வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், அவருக்கு பதவி வழங்ககூடாது என்ற எதிர்ப்பு குரலும் கட்சியில் கேட்கத் தொடங்கியுள்ளன. ஜெ.எம்.பஷீர், மன்னார்குடி குடும்பத்தினருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் என்று காரணம் சொல்லப்பட்டுள்ளது. பொதுக்குழுவை வெற்றிகரமாக நடத்தி முடித்துவிட்ட மகிழ்ச்சியிலிருக்கும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர், ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுவதைத் தடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்ஏ-க்களை தங்கள் பக்கம் இழுக்க பல கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருகின்றனர். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு பல வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டுவருகின்றன.

ஏற்கெனவே, தினகரன் ஆதரவாளர்களாக இருந்த தளவாய் சுந்தரம், நடிகர் ஜே.கே.ரித்தீஷ், ஜெ.எம்.பஷீர் உள்ளிட்டவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அணிக்கு மனம் மாறிவிட்டனர். இதில் தளவாய் சுந்தரமும், ஜெ.எம்.பஷீர் உள்ளிட்ட தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். தினகரன் ஆதரவாளர்களை ஸ்பெஷலாக கவனிக்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் முடிவுசெய்துள்ளனர். மேலும் முதல்வர் அணியிலிருக்கும் தினகரனின் ஸ்லீப்பர் செல்களாக இருப்பவர்களைக் கண்டறிந்த எடப்பாடி பழனிசாமி தரப்பு, அவர்களின் ஆட்சி மற்றும் கட்சியின் நிலவரங்களை விரிவாக எடுத்துச் சொல்லியுள்ளனர். அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியளித்துள்ளதாம். இதன்காரணமாக தினகரனின் ஆதரவாளர்கள், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் விசுவாசிகளாக மாறிவிட்டதாக தகவல் தினகரனுக்கு சொல்லப்பட்டுள்ளது. இதனால், தினகரன் தரப்பினர் வருத்தத்தில் உள்ளனர். தினகரனின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு செக் வைக்கும் வேலையில் தீவிரமாக களமிறங்கியுள்ளது எடப்பாடி பழனிசாமி தரப்பு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement