வெளியிடப்பட்ட நேரம்: 10:34 (14/09/2017)

கடைசி தொடர்பு:10:34 (14/09/2017)

"இது மக்களுக்கு கிடைத்த தோல்வி..!" - சதுப்பு நிலப் போராளி சேகர் ஏமாற்றம்

சதுப்புநிலங்களை மீட்க வேண்டும் என்கிற அவசியத்தை உலகெங்கும் நடந்துகொண்டிருக்கும் நீர் சார்ந்த நிகழ்வுகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. உலகின் எங்கோ ஒரு மூலையில் ஒரு நகரம் நீரில் மூழ்கிக் கொண்டே இருக்கிறது. இயற்கையை மீறி நடக்கிற எந்த ஒரு செயலும் அழிவை நோக்கியே வழிநடத்தும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் சென்னை வெள்ளம். 2015-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்த காரணம் அவை கொடுத்துவிட்டுப் போன துயர நினைவுகள்தான். உணவில்லாமல், உடையில்லாமல் அத்தியாவசியப் பொருள்கள் இல்லாமல் கடந்த நாள்களை நினைத்துப் பார்த்தால் பகீர் என இருக்கிறது. எல்லாவற்றுக்கும் ஒரே காரணம் சென்னைக்கு அரணாக இருந்தவை எல்லாம் இல்லாமல் போனதுதான். சென்னையின் வெள்ளத்துக்கு எவ்வளவோ காரணங்கள் சொல்லப்பட்டன. அதில்  முக்கிய காரணமாக சொல்லப்பட்டது சதுப்பு நிலங்களின் ஆக்கிரமிப்பும் அழிப்பும்தான்.

தோல்வி சதுப்பு நில

இயற்கையின் ஆக்கிரமிப்பை மீட்க எல்லா ஊரிலும் ஒருவர் போராடிக் கொண்டே இருக்கிறார். அதில் ஒருவர்தான் ஈஞ்சம்பாக்கம் சேகர். இதுவரை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை மீட்க பல வழக்குகளை தொடுத்து பல நிலங்களை மீட்டெடுத்தவர். சதுப்புநிலங்களுக்காக இவர் தொடர்ந்த வழக்குகள் ஏராளம். 2015-ம் ஆண்டு அக்கரை சதுப்பு நிலத்தில் குப்பைகளை கொட்டி நிலத்தை சமன்படுத்துவதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுகிறார். வழக்கை விசாரித்த நீதிபதி குப்பைக் கொட்டிய மாநகராட்சிக்கு 10000 ரூபாய் அபராதம் விதிக்கிறார். வழக்கு தொடர்ந்து பசுமை தீர்ப்பாயத்தில்  நடைபெறுகிறது. அக்கரை  சதுப்பு நில  ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கின் தீர்ப்பு கடந்த மாதம் 8-ம் தேதி அறிவித்திருக்கிறார்கள். 2013-ம் ஆண்டுக்கு முன் வழக்கில் குறிப்பிடப்பட்ட இடம் பதிவாகி இருப்பதால் கட்டடம் கட்டுவதற்கு தடை இல்லை என்றும், இனிமேல் புதிதாக எந்தக் கட்டடம் கட்டுவதாக இருந்தாலும் சதுப்புநில ஆணையத்திடம் அனுமதி கடிதம் பெற வேண்டும் என தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

சதுப்பு நிலம்

இந்த தீர்ப்பு குறித்து சேகரிடம் பேசியதில் இருந்து "இது எனக்கு கெடச்ச தோல்வி இல்ல, ஒட்டு மொத்த மக்களுக்கும் கிடைச்ச தோல்வி.   இப்படி ஒரு தீர்ப்பை நான் எதிர்பார்க்கவே இல்ல. கண்ணு முன்னால சதுப்பு நிலத்துல கட்டடம் கட்ட அனுமதி குடுத்தத என்னால ஜீரணிக்கவும் முடியல. இன்னைக்கு இல்லனாலும் ஒருநாள் அது விபத்துலதான் போய் முடியும். இதையெல்லாம் தெரிஞ்சே அங்க கட்டடம் கட்ட அனுமதி குடுக்குறத நெனச்சா பயமா இருக்கு. 1919-ம் ஆண்டு அரசு பதிவுல இந்த இடம் சதுப்பு நிலம்னு பதிவாகி இருக்கு. சென்னைக் கிறிஸ்தவ கல்லூரி தாவரவியல் மாணவர்கள் குறிப்பிட்ட அந்த  இடம் சதுப்பு நிலத்துலதான் இருக்குனு அறிக்கை குடுத்துருக்காங்க. எல்லா ஆதாரங்களையும் கொடுத்தும் எதுவுமே பண்ண முடியலன்னு நினைக்கும்போது கவலையா இருக்கு. நீதிமன்றம் கட்டடம் கட்ட அனுமதி கொடுத்திருக்க இடத்துல இருபது அடிக்கு காம்பவுண்ட் சுவர்  கட்டி, பத்துஅடி  ஆழத்துக்கு மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்துறோம்னு சொல்லுறாங்க. இந்த இடத்துல போக்குவரத்து அலுவலகம் வரப் போறதா சொல்றாங்க, இங்க எந்த கட்டடம் கட்டுனாலும் தாங்காது. காம்பவுண்ட் கட்டுறதுக்கு நிலத்துல இருந்த புல் எல்லாத்தையும் தீ வச்சு எரிச்சிட்டாங்க. வெடி வச்சு பறவைகளை வெரட்டி விட்டுட்டாங்க. வேடிக்கைப்  பாக்குறதோட வலியை அனுபவிச்சா மட்டும்தான் உணர முடியும். நான் தனி மனுஷன் என்னால என்ன சார் பண்ண முடியும்? இந்தத் தீர்ப்பை எதிர்த்து வழக்கு போடணும்னா டெல்லி போகணும். இப்பவும் இந்த விசயத்த இப்படியே விட முடியாமத்தான் ஹைகோர்ட் கொண்டு போக முயற்சி பண்ணிட்டு இருக்கேன். அங்க போனா குறைந்தது ஒரு லட்சம் செலவு ஆகும். நெறய பேர்கிட்ட உதவி கேட்ருக்கேன். பண்ணுறேன்னு சொல்லிருக்காங்க"  என்கிறார் வேதனையோடு.

தோல்வி

சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்திருப்பது தனியார் நிறுவனங்களோ தனிமனிதர்களோ அல்ல. தமிழக அரசு என்கிற தகவலை கேள்விப்பட்டதும் தூக்கி வாரிப் போடுகிறது. காரணம் இயற்கையை மீட்டெடுக்க வேண்டிய அரசே மூடி மறைக்க பார்ப்பதுதான் மிகப் பெரிய திகிலை கிளப்புகிறது. வெள்ளப் பாதிப்புகளுக்கு பிறகும் அரசு சதுப்பு நிலங்களை காப்பாற்றும் என நினைத்தவர்களுக்கு மத்தியில் சத்தமே இல்லாமல் இயற்கைக்கு எதிரான ஒரு போரை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது அரசு. அரசை எதிர்த்து வாழ்வதே கேள்விக் குறியாகி விட்ட காலத்தில் எதிர்த்து வழக்கு நடத்துவது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை உணரும்போது சற்று பயமாகவே இருக்கிறது.  தனிமனிதராக இருந்து பொது நல வழக்கு தொடர்ந்து, அதற்கான ஆதாரங்களை சமர்ப்பித்தும் இன்று வரை உண்மையை உண்மை என நிரூபிக்கவே சேகர் அலைந்துகொண்டிருக்கிறார்.

சதுப்பு நிலங்கள் குறித்து கவலைப்படாமலும் செயல்பாட்டாளர்களைக் கண்டுகொள்ளாமலும் இருக்க முடியாது. இன்னொரு மழைக்கும் வெள்ளத்துக்கும் சென்னையைக் காப்பாற்றுவதற்கு மனிதர்களும் படகுகளும் வேண்டுமானால்  இருக்கலாம். ஆனால் சென்னை?  


டிரெண்டிங் @ விகடன்