“பெரிய மனுஷியாகி விட்டால் பள்ளிக்குப் போவதை ஏன் நிறுத்த வேண்டும்?” நாடகம் வழியே ஓர் உரையாடல்!

குழந்தைத் திருமணம் எதிர்ப்பு பற்றி விழிப்பு உணர்வு

பெண்ணியம் பற்றி அதிகமாகப் பேசப்படும் இந்தக் காலகட்டத்தில்தான், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகமாக நடந்துவருகிறது. நகரங்களில் நவீனத்தின் தொழில்நுட்பம் பெண்களை உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள். கிராமப் பகுதிகளிலோ, கல்வி மறுப்பு, குழந்தைத் திருமணம், சுகாதார சீர்கேடு என அடிப்படை தடைகளையே இன்னும் கடந்துவர முடியாத நிலை. இந்த நிலை என்று மாறும்? இந்தக் கேள்விக்கான பதில் தேடப்பட்டுக்கொண்டே இருக்கிறது. விடை தேடும் முயற்சியில் பலரும் பல்வேறு நிகழ்வுகளில் ஈடுபட்டுவருகிறார்கள். அத்தகைய ஒரு நிகழ்வுதான் ஏலகிரி மலையடிவார கிராமத்தில் நிகழ்ந்தது. ஆடல், பாடல், நாடகம் என பல வடிவங்களில் பெரும் உரையாடலை நிகழ்த்தியது.

ஏலகிரி மலையடிவாரத்தின் ஆலங்காயம் தாலுக்காவில் உள்ளது, 'முல்லை' கிராமம். இங்கே 2000-ம் ஆண்டு கே.எஸ். ராமமூர்த்தி என்பவரால் தொடங்கப்பட்டது, சோடூஸ் (Society for the Develoment of Economically Weaker Sections - SODEWS) என்கிற தொண்டு நிறுவனம். இங்குள்ள விடுதியில் நூற்று ஐம்பதுக்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம குழந்தைகள் படிக்கின்றனர். இவர்களுக்கு பாடக் கல்வியோடு, கணினி பயிற்சி, யோகாசனம், விளையாட்டு போன்றவை சொல்லிக்கொடுக்கப்படுகிறது. கல்லூரி படிப்புக்கும் உதவிகள் செய்துதரப்படுகிறது. சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள ஆசிரியர்கள் 40 பேர், மூன்று குழுக்களாக இந்நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். அந்த மலைகிராமத்துக்கு சென்றார்கள், சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் பப்ளிக் ரிலேஷன்ஷிப் படிக்கும் மாணவிகள். பெண் கல்வி மற்றும் குழந்தைத் திருமணம் எதிர்ப்பு பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்த நாடகங்கள் நடத்தப்பட்டன. 

நாடக நிகழ்வுக்கு முன்பாக, ஆசிரியர்களோடு பேசினோம். ''சோடூஸ் அமைப்பு வழியாக மூன்று விதமான விஷயங்களில் கவனம் செலுத்திவருகிறோம். முதலில், அங்கன்வாடி குழந்தைகள். பெரும்பாலான அரசு அங்கன்வாடிகளில் குழந்தைகளுக்கு மதியம் உணவு கொடுத்து அனுப்பிவிடுகின்றனர். நாங்களோ குழந்தைகளுக்கு எளிய புத்தகங்கள், விளையாட்டுப் பொருள்கள் போன்றவற்றைக் கொடுத்து, படிப்பின் ஆர்வத்தைத் தூண்டுகிறோம். இரண்டாவதாக மொழித்திறன். தன் தாய் மொழியிலேயே ஒருவர் எழுதவும், பேசவும் சிரமப்படுவது கவலைக்குரிய விஷயம். அரசுப் பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவனின் அறிவானது, இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனின் அளவில்தான் உள்ளது. கிட்டதட்ட 40% மாணவர்கள் நிலை இதுதான். இதை மாற்றும் வகையில் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். மூன்றாவதாக, வளரும் இளம் மாணவிகளுக்கான சுகாதாரம். வயதுக்கு வந்த பெண்களின் உடலளவு, மனதளவு மாற்றங்களைப் பெற்றோர்களால் இன்றளவும் புரிந்துகொண்டிருக்கவில்லை. அது குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தி வருகிறோம்'' என்கிறார்கள் ஆசிரியர்கள். 

பெண்கள்

கலந்துரையாடலுக்குப் பிறகு, கல்லூரி மாணவிகள் நாடகங்களை நிகழ்த்தினர். முதல் நாடகத்தில், படித்துக்கொண்டிருக்கும் மாலதி என்ற பெண்ணுக்கு கிராமத்து ஊர் பெரிய மனிதன் ஒருவன் பொட்டுவைத்துவிடுகிறான். அவனுக்கு ஏற்கெனவே திருமணமாகி இருந்தால், ஊர் வழக்கப்படி அவனுக்கே அந்தப் பெண்ணை திருமணம் செய்துவைக்க வேண்டும் என்று பேசப்படுகிறது. பெண்ணின் பெற்றோரும் ஊருக்குப் பயந்து, 'இது நம் கலாசாரம்' எனச் சொல்லி, அந்த மனிதனிடமே தங்கள் பெண்ணை ஒப்படைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். அந்தச் சிறு மனதில் சேர்த்துவைத்த ஆசைகள் எல்லாம் சிதைவதுடன் நாடகம் முடிகிறது. அங்கே மிகப் பெரிய அமைதி நிலவுகிறது. 

'இந்த மாதிரியான கொடுமைகள், இன்றளவும் இங்கே நிகழ்ந்துவருகிறது. எங்கள் கண்களால் பார்த்துக்கொண்டிருக்கிறோம்'' என வேதனையுடன் சொன்னார் ஓர் ஆசிரியர்.

இரண்டாவது நாடகத்தில், நான்கு தோழிகள் மகிழ்ச்சியுடன் துள்ளிக்கொண்டு பள்ளிக்குச் சென்றுவருகின்றர். அதில் ஒருவள் பெரிய மனுஷி ஆகிறாள். அன்றோடு அவளது பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. தோழியின் பிரிவால் விரக்தியின் உச்சத்துக்கே சென்றுவிடுகிறாள் ஒரு பெண். சில நாட்கள் கழித்து அவளும் பெரியவளாகிறாள். பள்ளிக்குச் செல்லக்கூடாது எனப் பல தடைகள். ஆனால், அனைத்துத் தடைகளையும் தகர்த்தெரிந்து பள்ளிக்குச் சென்று சாதிக்கிறாள். அதேநேரம் வீட்டின் வேலைகளையும் பார்த்துக்கொள்கிறாள். 

இனிதாக முடிந்த இந்த நாடகத்திலும், உண்மையில் அந்தப் பெண்ணுக்கு வெற்றி கிடைத்ததா? இனி அவள் படித்து முடித்து வேலைக்குச் செல்வதோடு வீட்டு வேலைகளையும் சுமக்க வேண்டும். எப்போதும் பெண்கள் மட்டுமே வீட்டு வேலைகள் செய்ய வேண்டுமா? பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டதா வீட்டு வேலைகள்? ஆண்கள் என்றைக்குத் தன் வீட்டுப் பெண்ணையும் சக மனுஷியாக மதித்து வேலைகளைப் பகிர்ந்துகொள்ளப் போகிறார்கள்? 

நாடகத்தைப் பார்த்து முடித்த அத்தனை பேர் மனங்களிலும் இந்தக் கேள்விகள் எழுந்திருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!