ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு..!

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ சார்பில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்தல், 7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7-ம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டத்துக்கு எதிராக நீதிமன்றம் தடை விதித்த நிலையிலும் ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் தங்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

 ஆசிரியர் அரசு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்


முதல் இரு நாள்களிலும் தாலுகா மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் திங்கள்கிழமை முதல் தங்கள் போராட்டத்தைத் தீவிரப்படுத்தியுள்ளனர். அன்றைய தினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய இவர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமநாதபுரத்தில் 700-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தங்கள் நெற்றிகளில் நாமம் போட்டுக் கொண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.

போராட்டத்தின் 7-ம் நாளான இன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகையிட்டு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், முருகேசன் ஆகியோர் தலைமையில் 800-க்கும் அதிகமான ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தக் காத்திருப்பு போராட்டம் நாளையும் தொடரும் எனவும், தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றும் வரை அடுத்தடுத்த போராட்டங்களில் ஈடுபடப் போவதாக போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!