Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

போராடினால் போலீஸ் தாக்குதல், அத்துமீறலா? - குமுறும் பெண்கள், மாணவர்கள்

போலீஸ் தாக்குதல்

நீட் தேர்வை ரத்துசெய்யக்கோரியும் அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் மாணவர், இளைஞர் அமைப்புகள் ஒரு வாரமாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். சென்னையில் கடந்த 11ஆம் தேதி இந்திய மாணவர் சங்கமும் ஜனநாயக வாலிபர் சங்கமும் இணைந்து நடத்திய பேரணியில் திடீரென மறியல், போலீஸ் தாக்குதல் எனச் சூழலே மாறியது. இதில் போராட்டம் நடத்தியவர்களிடம் போலீஸார் அத்துமீறி நடந்துகொண்டனர்; குறிப்பாகப் பெண்களிடம் பாலியல் வதை செய்தார் என்று குற்றச்சாட்டு வெடித்துள்ளது. 

முன்னதாக கடந்த வாரம் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்த போராட்டத்துக்காக, தியாகராயர் கல்லூரி முன்பாக துண்டறிக்கை கொடுத்த சட்ட மாணவர்கள் தினேஷ்குமார், கணேஷ்குமார் இருவரையும் போலீஸார் தாக்கியதில் காயம் அடைந்தனர். தி.வி.க. மதுரை மாவட்டச்செயலாளர் மணியமுதனும் போலீஸ் தாக்குதலில் காயம் அடைந்த படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. 

சென்னைப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் நம்மிடம் குமுறல்களைக் கொட்டித் தீர்த்தனர். ஊழல் செய்த குற்றவாளிகள் நாட்டில் நெஞ்சை நிமிர்த்தி வலம்வருகிறார்கள்; மக்கள் உரிமைக்காகப் போராடுபவர்களைக் குறிவைத்து தாக்குவதன் அர்த்தம் என்ன என ஆவேசப்படுகிறார்கள், போராடும் மாணவர்களும் இளைஞர்களும். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக் குழு உறுப்பினர் சுசீந்திரா, நம்மிடம் கூறியதாவது: 

“நீட் தேர்வை ரத்துசெய்யக் கோரி முறைப்படி அனுமதி பெற்றுத்தான் இந்திய மாணவர் சங்கமும் ஜனநாயக வாலிபர் சங்கமும் பேரணியாகச் சென்றோம். புதுப்பேட்டை பகுதியில் சென்றபோது முன்னர் திருவல்லிக்கேணி போலீஸ்நிலையம்வரை அனுமதிக்கிறோம்; கைதாகிவிடுங்கள் என்று சொன்ன போலீஸ் அதிகாரிகள், திடீரென அப்படியெல்லாம் அனுமதிக்கமுடியாது என்று கூறினார்கள். 

ஏன் இப்படி திடீரென மாற்றினார்கள் என மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பனும், தென்சென்னை மாவட்டச் செயலாளர் நிருபனும் கேட்டனர். அப்போது நிருபனை போலீஸார் தள்ளிவிட்டனர். தென்சென்னை மாணவர் தலைவர் சந்துருவைக் கழுத்தை நெறித்துத் தள்ளினார்கள். அப்போது அங்கு இருந்த உதவி ஆணையர் சுப்பிரமணி என்பவர், மாணவர்களையும் இளைஞர்களையும் மிரட்டினார். வாலிபர் சங்கத் தலைவர் செந்தில், மத்தியக் குழு உறுப்பினர் தாமோதரன் இருவரையும் இப்படித்தான் செய்தனர். இதனால் முன்னால்போன தலைவர்களை எல்லாம் இப்படிச் செய்கிறார்களே என பின்னால் வந்தவர்கள் மறியலில் உட்கார்ந்தார்கள். 

பெண் போலீஸ்காரர்களும் மோசமாக நடந்துகொண்டார்கள். சுடிதார் சாலைப் பிடித்து இழுத்து எறிந்தார்கள். வாலிபர் சங்கத் தோழர் சரண்யாவின் தலைமுடியைப் பிடித்து அங்குமிங்கும் இழுத்து அத்துமீறல் செய்தனர். வேன் கதவில் மோதவைத்தார்கள். நான் மயங்கிவிழுந்தும் அதை நம்பாமல் நடிக்கிறாள் என இழுத்துப்போட்டார்கள். வேனில் ஏற்றியபோது ஆண் போலீஸ்காரர்கள், சரளமாக ஆபாசமாகப் பேசி, இழிவுபடுத்தினார்கள். வண்டிக்கு உள்ளேயும் வைத்து தோழர்களைக் கடுமையாகத் தாக்கினார்கள். 

பிடித்துவைத்திருந்த மண்டபத்தில் வைத்தும் எங்கள் தோழர்களிடம் தனித்தனியாகப் பேச்சு மூலம் சித்திரவதை செய்தார்கள். வாலிபர் சங்கத் தோழர் சகீலாவுக்கு ஆம்புலன்ஸ் வேண்டும் என எவ்வளவோ சொல்லியும் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பிறகு எல்லோருமாகச் சேர்ந்து அழுத்திய பிறகே ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்கள். 

அங்கு வந்த எஸ்.ஐ. ஒருவர், அடையாளம் தெரியாதவர்கள் தாக்கியதாக மருத்துவர்களிடம் எழுதச் சொன்னார். அதை நாங்கள் வன்மையாக எதிர்த்தோம். நாங்கள் போலீஸின் பிடியிலிருந்துதான் வந்திருக்கிறோம்; அவர்கள்தான் தாக்கினார்கள் என்பதைச் சொல்லி அதைப் பதியச் சொன்னோம். கடைசியில் போலீஸும் மற்றவர்களும் தாக்கியதாகக் குறிப்பு எழுதினார்கள். 

இங்கு மட்டுமல்ல சில நாள்களுக்கு முன் நுங்கம்பாக்கத்தில் பள்ளி மாணவர்கள் நடத்திய போராட்டத்தையொட்டி எங்கள் மாணவத் தோழர்கள் அருண், மாணிக்கம், விக்னேஷ் மூன்று பேர் கைதுசெய்யப்பட்ட போதும், போலீஸார் அவர்களைத் தாக்கினார்கள். உதவி ஆணையர் தொல்காப்பியன் தலைமையிலான போலீஸார்தான் தாக்கியுள்ளனர். 

சாதாரணமாக தற்செயலாக இந்தத் தாக்குதல் நடந்ததுபோலத் தெரியவில்லை. நீட் எதிர்ப்புப் போராட்டம் முடிந்துவிடும் சூழல் இருந்தது; மாநிலம் முழுவதும் இன்னும் போராட்டத்தை நடத்துகிறீர்களா என்று சொல்லிச் சொல்லி தாக்கியுள்ளனர். இது திட்டமிட்ட வன்முறை! 

பள்ளிக்கரணையில் நாங்கள் நடத்திய போராட்டத்திலும் போலீஸார் மிக மோசமாக நடந்துகொண்டார்கள். அது பற்றிய வழக்கு மனிதவுரிமை ஆணையத்தில் இன்னும் நடந்துவருகிறது. இத்தனைக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு வழக்கு அது.. அதுவே இந்த நிலையில்தான் இருக்கிறது. பல இடங்களில் போராட்டம் நடத்திய மாணவர்களைப் பள்ளித் தேர்வை எழுதவிடாமல் செய்திருக்கிறார்கள். நுங்கம்பாக்கம் பள்ளியின் தலைமையாசிரியர், மாணவிகளிடம் மிக மோசமாக, அருவருக்கத்தக்கபடி பேசியிருக்கிறார். தட்டிக்கேட்கப் போன பெற்றோர்களிடமும் மரியாதைக்குறைவாகப் பேசியிருக்கிறார். போலீஸ் மட்டுமல்ல அரசுத் தரப்பில் பல இடங்களிலிருந்தும் போராடும் மாணவர், இளைஞர்களுக்கு எதிரான போக்குதான் வெளிப்படுகிறது” என்று குமுறுகிறார், சுசீந்திரா. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 8 - அரியலூர் அனிதாவும் நானும்!
Advertisement

MUST READ

Advertisement