வெளியிடப்பட்ட நேரம்: 12:40 (14/09/2017)

கடைசி தொடர்பு:12:40 (14/09/2017)

தாமதமாக அஞ்சலி செலுத்த வந்த ஜான்பாண்டியன் மீது போலீஸார் வழக்குப் பதிவு!

அரசு விதிமுறைகளை மீறியதாக ஜான்பாண்டியன் உள்பட 10 பேர் மீது போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கும்பலாக வந்து அரசு விதிமுறைகளை மீறியதாக ஜான்பாண்டியன் உள்பட 10 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஜான்பாண்டியன் அஞ்சலி

 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கடந்த 11 ம்தேதி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதுசமயம் அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்த, மாவட்ட நிர்வாகம் சார்பில் நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு பிற்பகல் 12.30 மணி முதல் 1 மணி வரை நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அதன் தலைவர் ஜான்பாண்டியன் தனது ஆதரவாளர்களுடன் அரசு விதிமுறைகளை மீறி மாலை 6.30 மணிக்கு நினைவிடம் வந்து 7.20 மணிக்கு அங்கிருந்து வெளியேறினார்.


இதையடுத்து வேந்தோணி குரூப் வி.ஏ.ஒ.ஞானகுரு கொடுத்த புகாரின் பேரில், பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ், அரசு விதிமுறைகளை மீறி,  குறிப்பிட்ட நேரத்தைக் கடந்து கும்பலாக நினைவிடம் வந்து சென்ற தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் சேகர்,பரமக்குடி ஒன்றியச் செயலாளர் முருகன், ஒன்றியத் தலைவர் மலைச்சாமி, ஜெயக்குமார் ( எ) பாண்டி, மாவட்ட இளைஞரணி தலைவர் சேவியர், மாவட்ட இளைஞரணி செயலாளர் வினோத்குமார், வெங்கடேஸ்வரன், மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் அந்தோணி, முதுகுளத்தூர் ஒன்றியத் தலைவர் மலைக்கண்ணன், உள்பட 10 க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியும் இதேபோல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்திற்குப் பதிலாக பல மணி நேரம்  தாமதமாகவே வந்து அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.