வெளியிடப்பட்ட நேரம்: 11:44 (14/09/2017)

கடைசி தொடர்பு:15:53 (15/09/2017)

இடம் மாறும் திருச்சி காந்தி மார்கெட்... அரசை எச்சரிக்கும் வியாபாரிகள்!

காந்தி மார்க்கெட், gandhi market

திருச்சி காந்தி மார்க்கெட்டில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததையடுத்து, தொடரும் போக்குவரத்து நெரிசல் மற்றும் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தைக் கருத்தில்கொண்டு, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் கள்ளிக்குடி என்ற இடத்தில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய மார்க்கெட் அமைக்க அடிக்கல் நாட்டினார்.

இந்தத் திட்டத்தின்படி 65 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் மத்திய வணிக வளாகம் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டது. இந்தப் புதிய வணிக வளாகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தார். இந்த வளாகத்தில், தரைத்தளம், முதல் தளம் என இரண்டு தளங்களில் மொத்தம் ஆயிரம் கடைகள் கட்டப்பட்டுள்ளன. பழங்கள் மற்றும் காய்கறிகளைப் பாதுகாக்கக் குளிர்பதனக் கிடங்குகள், ஜெனரேட்டர்கள், சரக்குகளை ஏற்றி, இறக்குவதற்கு வசதியாக 5 கோடியே 51 லட்சம் ரூபாய் செலவில் மின் தூக்கிகள், 24 மணி நேரமும் மின்சாரம், தொழிலாளர்களுக்கு ஓய்விடம், கழிப்பிடம், உணவகம் ஆகியவை அமைந்துள்ளன. வங்கிக் கிளை, ஏ.டி.எம். மையம் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

gandhi market, காந்தி மார்க்கெட்

காந்தி மார்க்கெட்!

காந்தி மார்க்கெட்டைக் கள்ளிக்குடிக்கு இடமாற்றம் செய்வதற்கு வியாபாரிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். “இது, தங்கள் வயிற்றில் அடிக்கும் செயல்; வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மார்க்கெட்டில் 2,000 கடைகள் உள்ளன. 25 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இப்போது எந்தவித வசதியும் இல்லாமல் திடீரென்று கள்ளிக்குடிக்கு மாற்றுவதை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று அவர்கள் கூறியுள்ளனர். தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காந்தி மார்க்கெட் வியாபாரிகள், கடந்த 5-ம் தேதி கடைகளை அடைத்து, கறுப்புக்கொடிகளுடன் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து வியாபாரிகள் சிலர், “காந்தி மார்க்கெட்டுக்குள் வருவதற்கு 12 வழிகள் உள்ளன. கள்ளிக்குடி வளாகத்தில் இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. காந்தி மார்க்கெட்டில் 1,000 சதுரஅடி அளவிலான கடைகள் உள்ள நிலையில், அங்கு வெறும் நூறு சதுர அடி மட்டுமே உள்ளது. காந்தி மார்க்கெட்டில் மூவாயிரம் கடைகளுக்கு மேல் உள்ளன. ஆனால், கள்ளிக்குடியில் ஆயிரம் கடைகளே உள்ளன. மார்க்கெட்டை அங்கு மாற்றினால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றனர்..

காந்தி மார்க்கெட், gandhi market

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து, 24 மணி நேரமும் இயங்கக்கூடிய மார்க்கெட்டுகளில் மிக முக்கியமான மார்க்கெட்டாக காந்தி மார்க்கெட் இருந்து வருகிறது. நிலையான கடை, இரவு நேரக் கடை, வியாபாரக் கடை என ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே இங்கு கடைகள் திறம்படச் செயல்பட்டு வருகின்றன. சுதந்திரப் போராட்டத்தின்போது, நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மகாத்மா காந்தியால் அடிக்கல் நாட்டப்பட்டு 1953-ம் ஆண்டு ராஜாஜி சென்னை மகாண முதல் அமைச்சராக இருந்தபோது இந்த மார்க்கெட் திறந்து வைக்கப்பட்டது. காந்தி அடிக்கல் நாட்டியதாலேயே அவர் பெயரில் இயங்கிவருகிறது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புகொண்ட இந்த மார்க்கெட், மழைக் காலங்களில் பாதிப்புக்குள்ளாகும் என்றாலும், மக்கள் அதிகம் வந்துசெல்லக்கூடிய முக்கியமான இடத்தில் இருப்பதால், இந்தச் சந்தையை இடமாற்றம் செய்ய பொதுமக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

65 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட கள்ளிக்குடி மத்திய வணிக வளாகம் செயல்பாட்டுக்கு வருமா அல்லது காந்தி மார்க்கெட்டிலேயே போதிய வசதிகள் செய்யப்பட்டு வணிகச் சந்தை தொடர்ந்து அதே இடத்தில் செயல்படுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.


டிரெண்டிங் @ விகடன்