வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (14/09/2017)

கடைசி தொடர்பு:15:11 (14/09/2017)

“ ‘சுருட்டை முடி அழகு’, ‘ஹேர் ஸ்ர்ரெய்டனிங்’, உயர, நிற சீண்டல்!” கொந்தளிக்கும் தமிழிசை செளந்தரராஜன்

தமிழிசை செளந்தரராஜன்

கடந்த சில நாள்களாகச் சமூக வலைதளங்களில் தமிழிசை செளந்தரராஜன்தான் ஹிட் டாபிக். திருச்சியில் நடந்த பா.ஜ.க மாநாட்டில் அவர் பேசிய வீடியோ வைரலானது. அவரது ஹேர்ஸ்டைலும் மாறியிருப்பதாக சோஷியல் மீடியாக்கள் சொல்லிவருகின்றன. இதுகுறித்து அவரிடம் பேசியபோது... 

''உங்க ஹேர்ஸ்டைல் பற்றி அடிக்கடி விமர்சனம் வருதே...'' 

''சமூகத்துக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். நான் எப்பவும் எதார்த்தமா இருக்க நினைக்கிறேன். ஜெயலலிதா இறந்ததும் அவரை மாதிரியே புடவை, ஜாக்கெட், ஹேர்ஸ்டைல் என மாத்திக்கிட்ட சசிகலா மாதிரியான ஆள் நானில்லை. நான் எப்பவும் நானாகவே இருப்பேன். 'ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் ஆகிட்டீங்க, ஹேர்ஸ்டைலை மாத்திக்கலாமே'னு பலரும் என்கிட்டே சொல்லியிருக்காங்க. அரசியல்வாதிகள், பிரபலங்கள் என்றால் இப்படித்தான் இருக்கணும்னு பிக்ஸ் பண்றாங்க. தேவைப்படுற நேரங்கள்ல தோற்றத்துல மாற்றம் செய்துகொள்வது தவறில்லை. ஆனால், அதைப் போலித்தனமா வலிந்து செய்யக் கூடாது.'' 

''ஆனால் நீங்கள் ஹேர் ஸ்ட்ரெய்டனிங் செய்துகிட்டதா சொல்றாங்களே...'' 

''எனக்கு நடிக்கத் தெரியாது. நான் நானாதான் இருக்கேன். ஏசியில் உட்கார்ந்திருக்கும்போது தலைமுடி கலையாமல் இருக்கும். வெளியில் ஃபீல்டுக்கு வரும்போது கலைஞ்சு இருக்கும். அதையெல்லாம் போட்டோ எடுத்துப் போட்டு கலாய்க்கிறாங்க. 'உனக்குச் சுருட்டை முடிதான் அழகு'னு என் அம்மா அடிக்கடி சொல்வாங்க. அதனாலேயே என்னோட இயற்கையான சுருட்ட முடி எனக்கு ரொம்பப் பிடிக்கும். தலைவர்னா இப்படித்தான் இருக்கணும் ஏன் பிக்ஸ் பண்றீங்க? இறைவன் கொடுத்த ஒரு விஷயத்தை நீங்க எப்படி விமர்சிக்கலாம்? என் தோற்றம், முடி, நிறத்தைத் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கிறதுதான் உங்க நாகரிகமா? நான் ஊழல் செய்திருந்தாலோ, தவறான வார்த்தைப் பிரயோகித்திருந்தாலோ விமர்சிக்கலாம். இப்படி உணர்வு சார்ந்த விஷயத்தில் என்னைக் குத்திக் கிழிக்கிறது சரியா?'' 

''அரசியல்வாதிகளின் விமர்சனங்களை எப்படி எடுத்துக்கிறீங்க?'' 

''நான் கொஞ்சம் ஷார்ட்டாக இருப்பதால் மேடையில் பேசும்போது, எல்லோருக்கும் தெரியணும்னு ஒரு ஸ்டூல் போட்டு அதுக்கு மேலே ஏறி நின்னு பேசுவேன். அதுக்கும், 'பிஜேபியின் வளர்ச்சி இப்படித்தான் இருக்கு'னு கிண்டல் பண்றாங்க. எவ்வளவு மையை எடுத்துப் பூசினாலும் இதுக்கெல்லாம் அசரக்கூடிய ஆள் நானில்லை. 'டாக்டர் அக்கா' என அன்போடு கூப்பிடறவங்க ஒரு பக்கம் இருந்தாலும், 'பரட்டை அக்கா'னு கூப்பிடறவங்களும் இருக்கத்தான் செய்யுறாங்க. இதுக்கெல்லாம் கவலைப்பட்டால் பொதுச்சேவையில் இருக்க முடியாது.'' 

''சமூக வலைதளங்களில் உங்களைப் பற்றி மீம்ஸ்களும் விமர்சனங்களும் வர்றது பற்றி என்ன நினைக்கிறீங்க?'' 

''அந்த நண்பர்களின் கற்பனைத் திறனைப் பாராட்டுறேன். மீம்ஸூக்கான ஒவ்வொரு படங்களையும் சரியான இடத்தில்வெச்சு கலாய்க்கறாங்க. ஆனால், சில கட்சிகள் சம்பளம் கொடுத்து எங்களை கலாய்க்கிறதையே வேலையாக்கி வேற மாதிரி மீம்ஸ் போடுறதை கண்டிக்கிறேன்.'' 

தமிழிசை செளந்தரராஜன்

''நீங்க கோடி ரூபாய் கொடுத்துதான் டாக்டரானதா சொன்னீங்களாமே...'' 

''அப்படி நான் சொல்லவே இல்லை. நீங்க வீடியோவை சரியா பாருங்க. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு கோடி ரூபாய் இல்லாமல் சீட் வாங்க முடியாதுனு பொதுவாக சுட்டிக்காட்டியிருப்பேன்.'' 

''ஸ்டாலின் பேச்சுக்கு எதிர்ப்புத் தெரிவிச்சது பற்றி...'' 

''கலைஞர் போட்ட பிச்சையில்தான் நான் டாக்டரானே'னு ஸ்டாலின் சொல்லியிருக்கார். நான் என்னுடைய திறமையால்தான் மருத்துவச் சீட்டு வாங்கினேன். ஒருவேளை கலைஞரின் திட்டத்தால்தான் மருத்துவரானேனு வெச்சுக்கிட்டாலும் அதுக்காக அவங்களுக்கு அடிமையாக இருக்கணுமா என்ன?'' 

''ஒரு ரேடியோ பேட்டியில், 'நான் அந்தப் பெண்ணுக்கு மருத்துவம் பார்த்திருந்தா இறந்திருப்பாங்க'னு சொல்லியிருந்தீங்களே...'' 

''அது ஒரு ஜாலி புரோகிராம். ஜாலியாகக் கேள்விகள் கேட்டாங்க. அதற்குப் பதில் சொன்னேன். அவ்வளவுதான். ஒருமுறை ரோட்டுல பிரசவ வலியில் துடிச்சுட்டு இருந்த ஒரு பெண்மணியை கார்ல போன நான் பார்த்துட்டு, உடனே இறங்கி அவங்களை என் காரில் மருத்துவமனைக்கு அனுப்பிவெச்சுட்டு, மழையில் நின்னுட்டிருந்தேன். அதைத் தெரியப்படுத்தினப்ப, இதெல்லாம் விளம்பரம், அது இதுனு கேலி பண்ணினாங்க. உண்மையாக ஒருத்தருக்கு உதவினதையும் இப்படிச் சொன்னா எப்படி? இப்படி எந்த ஒரு நல்ல விஷயம் செய்தாலும், அதை நெகட்டிவாக விமர்சனம் செய்யறாங்க. அதையும் நான் பெருசா எடுத்துக்கலை. அந்த மருத்துவமனையில் வேலைப் பார்த்த அந்தப் பெண்ணின் சகோதரர்தான், 'தமிழிசை அட்மிட் செய்தது என் சொந்தத் தங்கை. அவருக்கு என் நன்றிகள்' என ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.”

''நீங்கள் இப்பவும் மருத்துவம் பார்க்கறது உண்டா?'' 

''பிஜேபியின் தமிழ்நாடு மாநிலத் தலைவரான பிறகு மருத்துவம் பார்க்கிறதை நிறுத்திட்டேன். இரண்டிலும் முழுமையாக ஈடுபட முடியாது என்பதற்காகத்தான் அந்த முடிவை எடுத்தேன். வேலையில்லாத மருத்துவர் அல்ல நான். என் காலகட்டத்தில் ஸ்கேன் படிப்பைப் பெரிதாக யாரும் எடுத்துப் படிக்காதபோது, நானும் சென்னை மெடிஸ்கேன் சுரேஷூம்தான் ஸ்கேன் சம்பந்தமான படிப்பைப் படிச்சிருந்தோம். அல்ட்ரா சவுண்ட்ல என்னை மாதிரி ஒரு டாக்டரை பார்த்திருக்கவே முடியாது. இதுவரை நான் ஸ்கேன் பார்த்து எந்தவொரு லிட்டிகேஷனும் வாங்காதவள். அந்த அளவுக்கு நான் சொல்றது துல்லியமாக இருக்கும். நான் ஸ்காலர் முடிச்சது எல்லாமே கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும்தான். தஞ்சை மருத்துவக் கல்லூரியில பயிற்சியில் இருந்தபோது, ஏசி இல்லாமல் ஸ்கேன் மிஷின் பயன்படுத்தப்படாமல் இருந்துச்சு.

என் அப்பாவுக்கு போன் பண்ணிச் சொன்னேன். சட்டமன்றத்தில் இதுகுறித்து பேசினார். அதனால், மிஷினைப் பயன்படுத்துறதுக்கான ஏற்பாட்டை செஞ்சாங்க. அதிகம் ஸ்கேன் இல்லாத காலத்திலேயே ஃப்ரீ ஸ்கேன் செய்த மருத்துவர் நான். தஞ்சையில் இருக்கும்போது, '100 ரூபாய் ஸ்கேன் சென்டர்'னு சொல்வாங்க. ஆயிரம் ரூபாய் வாங்கவேண்டிய விஷயத்துக்கு நூறு ரூபாய் வாங்கினேன். சென்னைக்கு வந்ததும், கோடம்பாக்கம், கே.கே நகர் போன்ற இடங்களில் இருக்கும் கிளினிக்கில் நூறு ரூபாய் மட்டுமே வாங்கினேன். பிரசவப் பெண்களுக்குத் தினமும் மூன்று முதல் நான்கு மணி வரை இலவச ஸ்கேனும் செய்திருக்கேன். குழந்தைகள் வயிற்றில் இருக்கும்போதே குறைபாடுகளைப் போக்கக்கூடிய விஷயங்களை நான்தான் கையிலெடுத்தேன். பல மருத்துவமனைகளுக்கு ஸ்பெஷலிஸ்டா இருந்திருக்கேன். அதனால், என்னை விமர்ச்சிக்கிறவங்க பேசுறவங்க இதையெல்லாம் கொஞ்சம் தெரிஞ்சுட்டுப் பேசினால் நல்லா இருக்கும்.''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்