பாம்பன் பாலத்தின்மீது மீண்டும் கார் மோதி விபத்து!

பாம்பன் பாலத்தில் கார் விபத்து

பாம்பன் பாலத்தில் இன்று அதிகாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பாலத்தின் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

ராமேஸ்வரம் தீவுப் பகுதியை நாட்டின் நிலப்பகுதியுடன் சாலை வழியாக இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது அன்னை இந்திரா காந்தி பாலம். 88-ம் ஆண்டு போக்குவரத்துப் பயன்பாட்டிற்கு வந்த பாலத்தினால் தீவுப் பகுதி அதிக வளர்ச்சியடைந்தது. ராமேஸ்வரம் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தப் பாலத்தினைக் கடக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பாம்பன் கடல் பகுதியில் அதிகமாக வீசும் உப்புக் காற்றின் விளைவாக பாலம் அவ்வப்போது சேதமடைந்து வந்தது. இதனைத் தடுப்பதற்காக நவீனத் தொழில் நுட்பத்துடன் கூடிய ரப்பர் சாலை கடந்த 2 மாதங்களுக்கு முன் போடப்பட்டது.

இந்த ரப்பர் சாலை வழுவழுப்பு தன்மையுடன் இருப்பதால் வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து நாள் தோறும் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. விபத்தை ஏற்படுத்தும் இந்த ரப்பர் சாலையை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் பாம்பன் சாலை பாலத்தில் ஏற்பட்ட 100 வது விபத்தினை சுட்டிக் காட்டும் விதத்திலும் பாம்பன் பகுதி மீனவ இளைஞர்கள் நேற்று கேக் வெட்டி நூதனப் போராட்டம் செய்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மண்டபத்திலிருந்து ராமேஸ்வரம் நோக்கி வந்த டவேரா கார் சாலையிலிருந்து வழுக்கி பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரின் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரின் டிரைவர் காயமின்றி தப்பிய நிலையில் பாம்பன் போலீஸார் இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!