வெளியிடப்பட்ட நேரம்: 13:21 (14/09/2017)

கடைசி தொடர்பு:13:21 (14/09/2017)

“கர்நாடகாவை விட்டுக் கிளம்ப மாட்டோம்!” - தினகரன் எம்.எல்.ஏ-க்களின் உதார்

தினகரன்

'தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கு அனுப்பப்பட்ட விளக்க நோட்டீஸுக்கு, வழக்கறிஞர்கள்மூலமே பதிலளிக்கப்படும்' என்று கர்நாடக சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் எம்.எல்.ஏ-க்கள் தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெரும்பான்மையை நிரூபிக்க வலியுறுத்தி, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ள தினகரனுக்கு ஆதரவாக 22 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். இதில், 19 எம்.எல்.ஏ-க்கள், கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும். அவரது ஆட்சிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் எனத் தனித்தனியாகக் கடிதம் கொடுத்தனர். அதன்பிறகு, புதுச்சேரிக்குச் சென்ற தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள், அங்குள்ள ரிசார்ட்டில் தங்கினர்.

இதனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசை, சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா ஆகியோர் ஆளுநரைச் சந்தித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சட்டசபையில் பெருபான்மையை நிரூபிக்க வலியுறுத்தினர்.

இந்தச் சூழ்நிலையில், ஆளுநரிடம் முதலில் கடிதம் கொடுத்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் மீது நடவடிக்கை எடுக்க, அரசு கொறடா ராஜேந்திரன், சபாநாயகர் தனபாலிடம் வலியுறுத்தினார். அதன்பேரில் சபாநாயகர் தனபால், 19 எம்.எல்.ஏ-க்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் மட்டும் தலைமைச் செயலகத்துக்கு வந்து விளக்கமளித்தனர். மற்ற எம்.எல்.ஏ-க்கள், தங்களுடைய வழக்கறிஞர்கள்மூலம் பதிலளித்தனர். இந்த நிலையில், அ.தி.மு.க-வின் கூட்டணிக் கட்சி எம்.எல்.ஏ-வான நடிகர் கருணாஸ் மற்றும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் 2 பேர் உட்பட, மூன்று எம்.எல்.ஏ-க்கள் தினகரனுக்கு ஆதரவளித்தனர். அவர்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும், அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுகிறோம் என கடந்த 7-ம் தேதி ஆளுநரிடம் கடிதம் கொடுத்தனர். ஆளுநரை தினகரன் சந்தித்த நேரத்தில், அவரது அணியிலிருந்த ஜக்கையன் எம்.எல்.ஏ., முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவளித்தார். அவர், சபாநாயகரைச் சந்தித்து ஆளுநரிடம் கொடுத்த கடிதத்தை வாபஸ் பெறுவதாகக் குறிப்பிட்டுள்ளார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி


இதையடுத்து, புதுச்சேரியிலிருந்த எம்.எல்.ஏ-க்கள், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் உள்ள சொகுசு விடுதிக்கு இடம் மாறினர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பினருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்தது. சசிகலா, தினகரனுக்கு பதிலடி கொடுக்க, கடந்த 12-ம் தேதி பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தி, சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் பதவியைப் பறித்தனர். மேலும், சசிகலாவால் நியமிக்கப்பட்ட, நீக்கப்பட்டவர்களின் நியமனம் செல்லாது என்றும் அறிவித்தனர். அடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் தங்கியிருந்த சொகுசு விடுதிக்குச் சென்று, தமிழக போலீஸார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். 
போலீஸாரின் விசாரணைக்கு தினகரன் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். போலீஸார்மூலம் எம்.எல்.ஏ-க்களிடம் பேரம் பேசப்படுவதாகவும் மிரட்டுவதாகவும் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்தச் சூழ்நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அளித்த பதில் திருப்தியில்லை என்றால், நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அதற்கான காலஅவகாசம் இன்றோடு முடிவடைகிறது.

கர்நாடகாவிலிருந்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சென்னைக்கு வருவார்கள் என்று முதல்வர் தரப்பினர் எதிர்பார்த்தனர். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் பலர், தங்கள் வழக்கறிஞர் மூலமே பதிலளிக்க முடிவுசெய்துள்ளனர். இந்தத் தகவலை அறிந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரசமாக அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், சபாநாயகருடன் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆலோசனை நடத்தினார். அதில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் விவகாரம், தி.மு.க. எம்.எல்.ஏ-க்களின் உரிமை மீறல் நடவடிக்கை வழக்கு ஆகியவை தொடர்பாக, சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதுகுறித்து விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினகரன்

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம். “சபாநாயகர் அனுப்பிய நோட்டீஸுக்கு, இந்த முறையும் எங்களுடைய வழக்கறிஞர்கள்மூலமே பதில் கடிதம் கொடுத்து அனுப்பியுள்ளோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியை மாற்றும்வரை கர்நாடகவிலிருந்து சென்னைக்கு வரும் திட்டம் இதுவரை இல்லை. எங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கட்டும். அதை சட்டரீதியாக எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். அ.தி.மு.க அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் தினகரன் எடுக்கும் எந்த முடிவுக்கும் கட்டுப்படுவோம். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து நடத்தியது பொதுக்குழுக் கூட்டமே இல்லை. தலைவரும், பொதுச் செயலாளரும் இல்லாத கட்சியைத் தேர்தல் ஆணையம் எந்த அடிப்படையில் அங்கீகரிக்கும். அ.தி.மு.க சட்டவிதிப்படி, பொதுச் செயலாளருக்கு மட்டுமே பொதுக்குழுக் கூட்டத்தை நடத்தும் அதிகாரம் உள்ளது. சசிகலாவின் தற்காலிக பொதுச் செயலாளர் நியமனம் தொடர்பான விசாரணை, தேர்தல் ஆணையத்திடம் நிலுவையிலிருக்கும்போது எந்த அடிப்படையில் பொதுக்குழு நடத்த முடியும்? அதை மீறி நடத்தி, சசிகலாவின் பொதுச் செயலாளர் பதவியைப் பறிப்பதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். தீர்மானத்தைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்று எங்கள் தரப்பில் இன்று மனு கொடுத்துள்ளோம். தேர்தல் ஆணையத்தின் இறுதி முடிவுக்காகக் காத்திருக்கிறோம். ஆளுநர் வித்யாசாகர் ராவ், சட்டசபையைக் கூட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பெருபான்மையை நிரூபிக்க உத்தரவிடுவார் என்ற நம்பிக்கை உள்ளது. பெருபான்மையை நிரூபிக்க சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். அதற்கு, நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றனர்.


டிரெண்டிங் @ விகடன்