வீரப்பன் படம் போட்ட பனியன் அணியக் கூடாது! - தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் | Tshirts with Veeerapan cartoons  not allowed in PMK social justice conference 

வெளியிடப்பட்ட நேரம்: 13:19 (14/09/2017)

கடைசி தொடர்பு:13:19 (14/09/2017)

வீரப்பன் படம் போட்ட பனியன் அணியக் கூடாது! - தொண்டர்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

பா.ம.க சார்பில் நடைபெறவுள்ள சமூகநீதி மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் வீரப்பன் படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களைப் பயன்படுத்தக் கூடாது என பா.ம.க தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

ramadoss
 

சமூகநீதி மாநாடு குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ், தொண்டர்களுக்கு வெளியிட்ட மடலில்,
”தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எவரும் செப்டம்பர் 17-ஆம் தேதியை மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. காரணம் அது பகுத்தறிவு பகலவன் தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் மட்டுமல்ல. தமிழகத்தில் சமூகநீதி தழைப்பதற்காக 21 பாட்டாளி சொந்தங்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்த நாள். அந்த தியாகம்தான் தமிழ்நாட்டிலுள்ள 108 சமுதாயங்களைச் சேர்ந்த மூன்று கோடி மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து சமூக நீதியை நிலை நிறுத்தியது.

தமிழகத்தில் இன்று மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற தனி வகுப்பு இருக்கிறது. அப்பிரிவைச் சேர்ந்த மக்கள் கல்வி கற்று, வேலையில் சேர்ந்து ஓரளவு முன்னேற முடிந்திருக்கிறது என்றால் அதற்கு காரணம் அன்று 21 தியாகிகள் தங்களின் இன்னுயிரை ஈந்து பெற்றுக் கொடுத்த இட ஒதுக்கீடுதான். அந்த தியாக திருவுருவங்களின் நினைவு நாளை ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 17ஆம் தேதி பாட்டாளி சொந்தங்களாகிய நாம் அனைவரும் போற்றிப் பெருமைப்படுத்துகிறோம். இந்த ஆண்டு இட ஒதுக்கீட்டு தியாகிகளுக்கு 30-ஆவது ஆண்டு நினைவு நாள் என்பதால் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வரும் 17-ஆம் தேதி மாலை 4.00 மணிக்கு விழுப்புரம் புறவழிச்சாலை ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டைப் பாட்டாளி மக்கள் கட்சி மிகப்பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளையும் விஞ்சும் வகையில் இந்தச் சமூக நீதி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியின் சமூக நீதி வரலாற்றில் இந்த மாநாடு நிச்சயமாக ஒரு மைல்கல்லாக அமையும் என்பது நிச்சயமாகும்.

தமிழகத்தின் சமூகநீதிப் பயணத்தில் இன்றைய காலகட்டம் என்பது மிகவும் முக்கியமானதாகும். சமூக நீதியையும், சமத்துவத்தையும் குலைப்பதற்கான சதிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புக்குத் தமிழகத்தில் நடத்தப்பட்டு வந்த பொது நுழைவுத்தேர்வை பாட்டாளி மக்கள் கட்சிதான் சட்டப் போராட்டம் நடத்தியும், அரசியல் அழுத்தம் கொடுத்தும் 2007 ஆம் ஆண்டில் ரத்து செய்ய வைத்தது. ஆனால், இப்போது தேசிய அளவில் நீட் என்ற பெயரில் மருத்துவப் படிப்புக்கான நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணித்திருக்கிறது. இதனால் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நொறுங்கிப் போய்விட்டன. மத்தியப் பாடத்திட்டத்தில் படித்ததுடன் சிறப்புப்பயிற்சியும் பெற்றவர்களுக்குத்தான் மருத்துவக் கல்வி சாத்தியமாகியிருக்கிறது.


மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைத் தொடர்பாக நேற்று வெளியான இன்னோர் உண்மை இதயத்தில் வலியை ஏற்படுத்தியிருக்கிறது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்களில் 5 பேர் மட்டும்தான் மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர். அதுவும் அவர்களில் மூவருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூட இடம் கிடைக்கவில்லை. மாறாக தனியார்க் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் தான் அதிகக் கட்டணம் செலுத்தி சேர்ந்துள்ளனர். இதுதான் நீட் தேர்வால் விளைந்த சமூக அநீதி.

சமூக நீதிக்காக நான் ஒவ்வொருமுறை அழைப்பு விடுக்கும் போதும் பாட்டாளி சொந்தங்கள் போர்ப்பரணி பாடி களமிறங்குவது வாடிக்கை. அதைப் போலவே நமது லட்சியப் பயணத்தின் முக்கிய மைல்கல்லான இம்மாநாட்டிற்கு மேலும் சிறப்பு சேர்க்கவிருப்பது பாட்டாளிகளின் வருகைதான். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் இம்மாநாட்டில் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். அதைவிட மிகவும் முக்கியம் நமது கட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் உங்களின் செயல்பாடுகள் அமைய வேண்டும் என்பதுதான். பொதுமக்களுக்கு எந்தவித இடையூறுமின்றி, அமைதியாகவும், பாதுகாப்பாகவும் விழுப்புரம் மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

pmk
 

இந்நிலையில் மாநாடு தொடர்பாக  பா.ம.க தொண்டர்களுக்கு 11 முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார் ராமதாஸ். அதில் ”சிங்கம், போர்வாள், அக்னி கலசம், வீரப்பன் படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களைப் பயன்படுத்தக் கூடாது” என்னும் உத்தரவும் அடக்கம். மேலும் ‘மாற்றுச் சமுதாய மக்கள் மனம் வருந்தும் படி சமுதாய கோஷங்களை எழுப்பக் கூடாது’ என்றும் பா.ம.க தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க