வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (14/09/2017)

கடைசி தொடர்பு:14:13 (14/09/2017)

மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? ஹெச்.ராஜா விளக்கம்

H.Raja

தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை திடீரென சந்தித்துப் பேசியது குறித்து பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா விளக்கம் அளித்தார்.

சாரண- சாரணியர் இயக்கத்தின் தலைவராக பா.ஜ.க-வைச் சேர்ந்த ஹெச்.ராஜாவைத் தேர்ந்தெடுக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக  எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளதோடு, ஹெச்.ராஜாவை நியமிக்க முயலும் செயல், பள்ளி மாணவர்களின் பிஞ்சு உள்ளத்தில் காவி நஞ்சை விதைக்கும் செயல் என்று விமர்சித்தும் இருந்தார்.

இந்த நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில், மு.க.ஸ்டாலினை இன்று ஹெச்.ராஜா திடீரென சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு சில நிமிடங்களே நடந்தது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஹெச்.ராஜா, ''என்னுடைய மணி விழாவுக்கு அழைக்கவே மு.க.ஸ்டாலினைச் சந்தித்தேன். தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நலம்குறித்து மு.க.ஸ்டாலினிடம் விசாரித்தேன். மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது அரசியல் கலப்பு இல்லாத, நட்புரீதியான சந்திப்பு. மு.க.ஸ்டாலினுடனான சந்திப்பில் இம்மி அளவுகூட அரசியல் பேசவில்லை. இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பது சகஜமே என்று கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், பள்ளிப் பருவத்திலேயே சாரணர்- சாரணியர் இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு உண்டு. இந்த இயக்கத்துக்கு என்னால் முயன்ற அளவில் உதவ முடியும் என்று கருதுவதால், போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளேன்" என்று ஹெச்.ராஜா கூறினார்.