வெளியிடப்பட்ட நேரம்: 14:12 (14/09/2017)

கடைசி தொடர்பு:14:28 (14/09/2017)

குட்கா விவகாரம்: ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை!

குட்கா விவகாரத்தில் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க அக்டோபர் 12-ம் தேதி வரையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்ய அனுமதித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியது. 

சட்டசபையிலும் இந்தப் பிரச்னை பெரிதாக வெடித்தது. இந்தக் குற்றச்சாட்டில் தொடர்புடைய காவல்துறை அதிகாரியான டி.கே.ராஜேந்திரனின் பதவியை மேலும் நீட்டித்ததுக்கு எதிராகவும், சி.பி.ஐ விசாரணைக் கோரியும் தி.மு.க எம்.எல்.ஏ அன்பழகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில, சட்டப்பேரவைக்குத் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருள்களை எடுத்துவந்தது தொடர்பாக விளக்கமளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 தி.மு.க. உறுப்பினர்களுக்குப் பேரவை உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியது. உரிமைக்குழு அனுப்பிய நோட்டீஸுக்கு எதிராக ஸ்டாலின் தொடர்ந்த வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, “அக்டோபர் 12-ம் தேதி வரையில் ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தடை விதித்த உயர் நீதிமன்றம், இந்த மனு விசாரணைக்கு உகந்ததா என்பதுகுறித்து அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தது.