Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நோபல் வென்ற கைலாஷ் சத்யார்த்தி பாராட்டிய தமிழகப் பெண்! #KailashSatyarthi

கைலாஷ் சத்யார்த்தி

மைதிக்கான நோபல் பரிசுபெற்ற கைலாஷ் சத்யார்த்தி, தமிழகப் பெண் ஒருவரை உச்சிமுகர்ந்து பாராட்டியிருக்கிறார். 

குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, ‘பாரத் யாத்திரை’ என்ற பெயரில் இந்தியா முழுவதும் பேரணி மேற்கொண்டுள்ளார் கைலாஷ் சத்யார்த்தி. அதன் தொடர்ச்சியாக, நேற்று (புதன்கிழமை) சென்னைக்கு வந்திருந்தார். குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு ஆகியவற்றை முன்னிறுத்தி ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகே பேரணி நடத்தினார். இந்தப் பேரணியில் லதா ரஜினிகார்ந்த், நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், செளந்தர்யா ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்றனர். 

பேரணியின் தொடர்ச்சியாக, சென்னை லயோலா கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்றர் கைலாஷ். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் சென்னைச் சேர்ந்த சங்கீதா. குழந்தைத் தொழிலாளியாக இருந்து இன்று சாதனைச் சிறுமியாக உயர்ந்திருப்பவர். 

கைலாஷ் சத்யார்த்திகூட்டத்தில் பேசிய கைலாஷ் சத்யார்த்தி, “குழந்தைகள் மீதான வன்முறைகள் இந்தியாவில் தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. இத்தகைய வன்முறைகளைத் தடுக்க அரசும் காவல்துறையும் முயற்சி எடுத்தால் மட்டும் போதாதது. இத்தகைய வன்முறைகளை பொதுமக்களாகிய நாம் பல சமயங்களில் கண்டும் காணாமல் சென்றுவிடுகிறோம். இந்தக் கள்ள மௌனத்தை நாம் உடைத்தெறிய வேண்டும். பாரத யாத்திரையின் நோக்கம் இதுதான். பாலியல் வன்முறையிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் போஸ்கோ சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு மட்டும் 15,000 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அதில், வெறும் 4% வழக்குகளில்தான் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.. 6% வழக்குகளில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீதம், 90% வழக்குகள் நிலுவையில் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும். 

இந்த யாத்திரையைத் தனிப்பட்ட விளம்பரத்துக்காகவோ, என்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளவோ செய்யவில்லை. நான் அமைதிக்கான நோபல் பரிசு வாங்கும் வரை, இந்தியாவில் என்னை யாருக்கும் தெரியாது. ஆனால், குழந்தைத் தொழிலாளர்களை ஒழிப்பதற்காக 1980-ம் ஆண்டிலிருந்தே பணியாற்றிக்கொண்டிருந்தேன். இந்த யாத்திரையால் எனக்கு மற்றொரு நோபல் பரிசு கிடைக்கப் போவதில்லை. நான் இந்தப் பயணத்தைத் தொடர விரும்புகிறேன். உங்கள் எல்லோருக்கும் நான் கூற விரும்புவது இதுதான்... ஒவ்வொரு தனிமனிதனும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் வன்முறையைத் தடுக்க இயன்றயளவு பங்காற்ற வேண்டும். 

தத்துவ ஞானியும் தமிழ்ப் புலவருமான திருவள்ளுவர், மிகச் சரியாகவே கூறியிருக்கிறார். நம்முடைய பரிவு மட்டுமே நம் லட்சியத்தை அடையச் செய்யும் காரணி என்கிறார். அதையே நானும் சொல்லிக்கொள்கிறேன். 

இந்த இடத்தில் சங்கீதாவை பாராட்ட விரும்புகிறேன். தெருவோரம் பிறந்து வளர்ந்த இவர், குழந்தைத் தொழிலாளியாகி இருந்தவர். அதிலிருந்து மீட்கப்பட்டு, இன்று ஒரு கால்பந்து வீராங்கனையாக உருவாகி இருக்கிறார். தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறார். 'என்னைப் போன்ற குழந்தைத் தொழிலாளியாகும் நிலையை இனி எந்தக் குழந்தைக்கும் ஏற்பட விடமாட்டேன்' என்று அவர் சொன்னது பெருமிதமான விஷயம். காலையிலிருந்தே அவரை நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். எந்தவித கூச்சமும் இல்லாமல், மிகுந்த தன்னம்பிக்கையுடனும் உறுதியுடனும் பேசினார். இதுபோன்ற இளைய தலைமுறையைத்தான் நம் தேசம் உருவாக்க வேண்டும். சங்கீதாவிடம் இருக்கும் மன உறுதிதான் நம் ஒவ்வொரிடமும் வேண்டும்” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டினார். 

அங்கே கூடியிருந்தவர்களைக் குழந்தைகளின் பாதுகாப்புக்கு தாங்களால் இயன்றவற்றைச் செய்ய முடியும் என உறுதிமொழி எடுக்குமாறு சொல்ல, அத்தனை பேரும் திடமான மனதுடன் உறுதிமொழி ஏற்றது, நம்பிக்கை கீற்றை உண்டாக்கியது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மெகா ரெய்டு - 187 இடங்கள்... 1,800 அதிகாரிகள்... குவிந்தது பணம்... குவித்தது யார்?
Advertisement

MUST READ

Advertisement
[X] Close