நாஞ்சில் சம்பத்தைக் கைதுசெய்ய இடைக்காலத் தடை!

தமிழிசை சௌந்தரராஜனை அவதூறாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத்துக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில் அவரைக் கைதுசெய்ய இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நாஞ்சில் சம்பத்

டி.டி.வி.தினகரன் ஆதரவாளரான நாஞ்சில் சம்பத், பிரதமர் மோடி மற்றும் பி.ஜே.பி-யின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக புகார் எழுந்தது. மேலும், பி.ஜே.பி-யின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரையும் பேட்டி ஒன்றில் அவர் விமர்சனம் செய்திருந்தார். அவருடைய இந்தப் பேச்சுக்கு எதிர்வினையாக பி.ஜே.பி தரப்பில் கடுமையாக விமர்சனங்கள் எழுந்தன. இதைத்தொடர்ந்து நாஞ்சில் சம்பத் வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர் பி.ஜே.பி-யினர். 

இதன் தொடர்ச்சியாக நாஞ்சில் சம்பத் மீது பி.ஜே.பி-யைச் சேர்ந்த பிரமுகர்கள் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மேலும், பம்மல், பல்லாவரம், அம்பத்தூர் எஸ்டேட் உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் அவர் மீது 8 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச்  சட்டம், பொது இடத்தில் ஆபாசமாகப் பேசியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், நாஞ்சில் சம்பத்தை கைதுசெய்ய இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!