வெளியிடப்பட்ட நேரம்: 18:45 (14/09/2017)

கடைசி தொடர்பு:14:37 (15/09/2017)

அண்ணா பிறந்தநாள் மாநாடு பெரும் அரசியல் திருப்பத்தை உண்டாக்கும்: வைகோ

வைகோ

நாளை மறுதினம் நடக்கும் அண்ணா பிறந்தநாள் மாநாடு பெரும் அரசியல் திருப்பத்தை உண்டாக்கும் எனக் கூறியிருக்கிறார் வைகோ.

அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு, ம.தி.மு.க. கட்சியின் சார்பில் தஞ்சாவூரில் வரும் 15-ம் தேதி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை மேற்பார்வையிட அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்தார்.

திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வைகோ, “கடந்த 95-ம் ஆண்டு எங்கள் கட்சி சார்பில் திருச்சியில் நடைபெற்ற முதல் ம.தி.மு.க. மாநில மாநாடு மிகப்பெரிய மாநாடாகவும், பிரமாண்டமாகவும் அமைந்தது. அதிகாலை 3.30 மணிக்கு பேசத் தொடங்கிய நான் 5.30 மணிக்குத்தான் முடித்தேன். அந்தளவுக்கு எங்கள் இயக்கத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த  அந்த மாநாட்டையும் மிஞ்சும் அளவுக்கு தஞ்சை மாநாடு அமையும். இந்த மாநாட்டில் முக்கிய தீர்மானங்கள் பல நிறைவேற்றப்படும். மேலும், கட்சியின் எதிர்காலத்தைக் கணக்கிட்டு, அரசியல் கூட்டணி குறித்தும் அன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளோம்.

ராஜீவ் வழக்கில் 3 பேரின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் காரணமாக விளங்கிய, வழக்கறிஞரும், எனது நண்பருமான ராம்ஜெத்மலானியை அவரது பிறந்த நாளான நேற்று சந்தித்தேன். அப்போது ராம்ஜெத்மலானி, மதச்சார்பின்மையும், கூட்டாட்சி தத்துவமும் காக்கப்பட வேண்டுமானால் காங்கிரஸ், பி.ஜே.பி அல்லாத கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்றார். அதுதான் எனது ஆசையும்கூட. அதற்குப் பக்க பலமாகவும் இருப்பேன் என்று கூறினேன். நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நேற்று தீர்ப்பாயத்தில் ஆஜராகி வாதாடினேன். அப்போது தீர்ப்பாயம் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி தந்துள்ளது, நாங்கள் எரிவாயு எடுப்போம் என தைரியமாக கூறினார். தீர்ப்பாயத்தைத் தடை செய்ய மத்திய அரசு திட்டம் தீட்டுகிறது. இந்த வி‌ஷயத்தில் அனைத்து வழக்கறிஞர்களும், சமூக ஆர்வலர்களும் ஒன்றாக இணையவேண்டும்” எனக் கூறினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க