Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

“சின்ன வயசுல பீடியும் கள்ளும்தான் சோறு போட்டுச்சு!” - மனம் திறந்த பினராயி விஜயன்

மிழ்நாட்டு மக்களுக்கு, கேரள மக்கள் மீது இப்போது  பொறாமையோ பொறாமை! `ஜிமிக்கி கம்மல்’ பாட்டுக்குப் பதில் மீம்ஸ் போடுவதிலேயே இதைக் காண முடியும். நல்ல தலைவர் இல்லாமல் தமிழகம் தத்தளிக்க, கேரளத்தைப் பிரமாதமாக ஆட்சிசெய்கிறார் பினராயி விஜயன். கேரள மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தமிழகத்தைச் சேர்ந்த முருகன் இறந்தபோது, அந்தப் பிரச்னையை மனிதநேயத்தோடு அணுகினார். சில நடிகர்கள் அடுத்தடுத்து தமிழக அரசியலில் குதிக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது. ரஜினி, கமல் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அரசியல் கற்க கமல்ஹாசன் தேடிச் சென்ற தலைவர் பினராயி விஜயன்.

பினராயி விஜயனின் குடும்பம்

Photo Courtesy: Manoramma

கேரள முதலமைச்சராக,  தேர்ந்த அரசியல்வாதியாக அறியப்பட்டுள்ள பினராயி விஜயன், தன் சொந்த வாழ்க்கை பற்றி மீடியாக்களிடம் வாய் திறந்ததில்லை. கேரள மக்களுக்கேகூட பினராயி விஜயனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி முழுமையாகத் தெரியாது. ஓணம் பண்டிகை சமயத்தில் 'நான், கள் இறக்கும் தொழிலாளியின் மகன்' என்றும்,  தன் குடும்பம் பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார். அப்போது அவரிடம் எடுத்த பேட்டியின் தொகுப்பு இது.

“எங்க அம்மாவுக்கு 14 குழந்தைகள். நான்தான் கடைசி. எனக்கு முன்னதாகப் பிறந்தவர்களில் இரண்டு அண்ணண்கள் மட்டுமே உயிர் பிழைத்தனர். அப்பா கள் இறக்கும் தொழிலாளி. விவசாய நிலம் கொஞ்சம்  இருந்தது. கள்ளு விற்று அதில் கிடைக்கும் வருவாயில்தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. ஒருநாள் என் படிப்பை நிறுத்திட்டு, பீடி சுற்றும் வேலைக்கு என்னை அனுப்பினார். எங்க குடும்பத்துக்கு, கள்ளு விற்ற காசும் பீடி சுற்றிய காசும்தான் சோறு போட்டுது. திடீர்னு என்னை பீடி சுற்றும் வேலையிலிருந்து நீக்கினார்கள். வீட்டில் கொண்டுவந்து விட்டு, 'இவனைப் படிக்க அனுப்புங்க’னு அம்மாகிட்ட சொல்லிட்டுப் போயிட்டாங்க. இப்படித்தான் பள்ளிப் பக்கம் மீண்டும் ஒதுங்கினேன். இல்லையென்றால், இப்போது நான் என்னவாகி இருப்பேன் என்றுகூட யோசிச்சுப்பார்க்க முடியவில்லை'' என,  ஃப்ளாஷ்பேக்கைத் திரும்பிப்பார்க்கும் பினராயி விஜயனுக்கு இப்போது 72 வயது!

கண்ணூர் மாவட்டத்தில் `பினராயி’ என்ற ஊர்தான் விஜயனின் சொந்த ஊர். பெயருடன் சேர்த்து ஊரின் பெயரையும் இணைத்து எழுதும் வழக்கம் கேரளக்காரர்களுக்கு உண்டு. இப்படித்தான் விஜயன், பினராயி விஜயன் ஆனார். 

சிறு வயது விஜயனின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது. பள்ளிப் படிப்பை முடித்தப் பிறகு என்ன செய்வதெனத் தெரியாமல், பத்ராவதியில் இருந்த மாமாவிடம் அடைக்கலமானார். கல்லூரியில் சேர முயற்சித்தபோது, அட்மிஷன் முடிந்திருந்தது. ஓராண்டு வீண். அந்தச் சமயத்தில் தறி ஓட்டி சம்பாதித்து வயிற்றைக் கழுவியவர், அடுத்த ஆண்டு தலைசேரியில் உள்ள பிரன்னன் கல்லூரியில் பி.ஏ பொருளாதாரப் படிப்பில் சேர்ந்தார். முதல் வருடத்தில்தான் உண்டு தன் படிப்பு உண்டு என்று இருந்தவர்... அடுத்த வருடத்தில் அதிரடி போராட்டக்காரராக மாறினார். 

பினராயி விஜயன் கமலா தம்பதி

Photo Courtesy: Manoramma

“கேரள மாணவர் சங்கத்தில் சேர்ந்து தொடர்ச்சியாகப் போராட்டங்களில் ஈடுபட்டேன். வருகைப்பதிவு குறைந்தது, கல்லூரி நிர்வாகம், தேர்வு எழுத அனுமதிக்கவில்லை.  நிர்வாகத்தை எதிர்த்து நீதிமன்றத்தை நாடிய கதையும் எனக்கு உண்டு. முதன்முறையாக ஒரு படகுக்காரரை எதிர்த்துதான் போராட்டத்தில் ஈடுபட்டேன். ஒருமுறை, ஆற்றைக் கடக்க மாணவர்களிடம் படகுக்காரர் தலா 10 பைசா கேட்டார். அப்போது 10 பைசா என்பது அதிகம். நாங்கள் கொடுக்க மறுத்தோம். `படகைவிட்டு கீழே இறங்கவில்லை என்றால், படகைக் கவிழ்த்துவிடுவேன்' என்று மிரட்டினார். எல்லோரும் இறங்கிய பிறகும் நான் மட்டும் இறங்க மறுத்தேன். கடைசிவரை படகைவிட்டு நான் இறங்கவே இல்லை. முடிவில் என் போராட்டத்துக்குத்தான் வெற்றி கிடைத்தது. `இனிமேல் மாணவர்களிடமிருந்து படகுக் கட்டணம் வசூலிக்கக் கூடாது’ என அரசு தீர்மானம் கொண்டுவந்தது. நான் நடத்திய முதல் போராட்டமே வெற்றியில்தான் முடிந்தது’’ எனக் கூறும் விஜயனுக்கு பெண் கிடைத்தக் கதைகூட சுவாரஸ்மானதுதான்.

எமர்ஜென்சி காலத்தில், பினராயி விஜயனை போலீஸ் பிடித்துச் சிறையில் அடைத்தது. அம்மா கல்யாணிக்கு `இனி நம்ம பையனுக்கு யார் பொண்ணு தருவா?’னு ஒரே கவலை. எமர்ஜென்சி காலம் முடிந்து சிறையிலிருந்து வெளியே வந்த விஜயனுக்கு பெண் கொடுக்க, பாலன் மாஸ்டர் என்கிற போராட்டக்காரர் முன்வந்தார். கேரளாவில் போராட்டக்காரர்களை நம்பி கலகவாதிகள்தான் பொண்ணு கொடுப்பார்கள். பாலன் மாஸ்டரும் கலகவாதிதான். எமர்ஜென்சி காலத்தில் சிறைக்குச் சென்றதற்காக விஜயனுக்கு தன் மகளைத் திருமணம் செய்து கொடுக்கச் சம்மதித்தார். ஈ.கே.நாயனார் தலைமையில் திருமணம் மிக எளிமையாக நடைபெற்றது. திருமணத்தில், எந்தவிதமான சடங்குகளோ, சம்பிரதாயங்களோ நிகழவில்லை. திருமணத்துக்குப் பிறகு மனைவியுடனேயே  கட்சிப் பணிக்குச் சென்றார். மனைவி கமலா கர்ப்பிணியாக இருந்தபோதுகூட அவருடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பினராயி விஜயனுக்கு இப்போது விவேக், வீணா என இரு வாரிசுகள்.

தாயுடன் பினராஜி விஜயன்

Photo Courtesy: Manoramma

‘நீங்க ரொம்ப ஸ்ட்ரிக்டாமே... வைத்த பொருள் வைத்த இடத்தில் இல்லையென்றால் கோபப்படுவீர்களே'' என்று கேட்டால்,

“ஒரு கம்யூனிஸ்ட், தன்னளவில் ஒழுக்கமாக இருக்க வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சி  எனக்குக் கற்றுத்தந்த பாடம் இது. இந்த வயதில் நான்  இவ்வளவு ஃபிட்டா இருக்கேன் என்றால், அந்த ஒழுக்கம்தான் காரணம். தினமும் காலை 5 மணிக்கு எழுவேன். 30 நிமிடம் ட்ரெட்மிலில் நடைப்பயிற்சி. அரை மணி நேரம் யோகா. சமயங்களில் சைக்கிளிங்.'' என தன் ஃபிட்னஸ் ரகசியங்களை  உடைத்தார் இந்த முன்னாள் பேட்மின்டன் வீரர்!

ஆம், பினராயி விஜயன் சிறந்த பேட்மின்டன் வீரரும்கூட. கல்லூரி அணியிலும் ஆடியிருக்கிறார். பினராயி விஜயனை அரசியல் காரணங்களுக்காகத் தாக்க பல முயற்சிகள் நடந்ததுண்டு.  

“தற்காப்புக்காக  கராத்தே, குங்பூ ஏதாவது படிச்சிருக்கிங்களா?” 

“வார்த்தைகள்தான் என் ஆயுதம்!’’ என தன்னம்பிக்கையைத் தெறிக்கவிடுகிறார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close