”இமானுவேல் சேகரன் நினைவு நாளில் விதிமீறியவர்கள் மீது வழக்குகள் பதியப்படும்!”

பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி நடந்த இமானுவேல் சேகரன் நினைவு தினத்தில் அரசின் விதிமுறைகளை மீறியதாக 200 வழக்குகள் பதிவு செய்ய முடிவு செய்திருப்பதாக ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தெரிவித்தார்.

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, ''பரமக்குடியில் கடந்த 11 -ம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவு தினத்தை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் பல்வேறு விதிமுறைகளை அறிவித்திருந்தது. விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசின் சார்பில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. அரசியல் கட்சியினர் குறிப்பிட்ட நேரத்தில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நேரத்தைவிட காலதாமதமாக வந்து சில அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தினார்கள்.

இம்மானுவேல் சேகரன் நினைவு நாள்

இதில் தமிழக மக்கள் முன்னைற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கே.கிருஷ்ண சாமி உள்ளிட்ட காலதாமதமாக வந்த அரசியல் கட்சியினர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். 

இது தவிர மாவட்டம் முழுவதும் அன்றைய தினம் வாகனங்களில் கோஷங்கள் எழுப்பிக்கொண்டு வந்தவர்கள், பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்றுகொண்டு பயணம் செய்தவர்கள் என அரசு விதிமுறைகளை மீறியதாக 200 வழக்குகளும் படிப்படியாகப் பதிவு செய்யப்படும். அதேபோல் பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கு இரண்டே மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டிருப்பதாக'' அவர் தெரிவித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!