வெளியிடப்பட்ட நேரம்: 22:08 (14/09/2017)

கடைசி தொடர்பு:12:19 (15/09/2017)

முதல்வர் நீராடுவதற்காக காவிரியில் தாமதமாகத் தண்ணீர் திறப்பா? -வெடிக்கும் 'புஷ்கர விழா' சர்ச்சை

காவிரி புஷ்கரம்

காவிரி புஷ்கர விழாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாமதமாகக் காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் காவிரி வறண்டுவிடும் காலங்களிலும் துலாக்கட்டத்தில் பக்தர்கள் புனிதநீராட வேண்டும் என்பதற்காக தொட்டிகட்டி, போர்வெல் போட்டு நீர்நிரப்புவது வழக்கம். இந்நிலையில், கடந்த 12-ம் தேதி காஞ்சி சங்கராச்சாரியர்கள், மடாதிபதிகள் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருந்து வருகை தந்திருக்கும் நூற்றுக்கணக்கான துறவிகள், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அழுக்கடைந்த தொட்டி தண்ணீரில்தான் நீராடினார்கள். இந்நிலையில் புஷ்கர விழாவையொட்டி திடீரென நேற்று (13-ந்தேதி) காவிரியில் 10 கனஅடி நீர் திறந்துவிடச் சொல்லி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.  காவிரியில் தண்ணீர் திறந்துவிட்டதையடுத்து இன்று காலை அமைச்சர் ஓ.எஸ். மணியன்  தனது மனைவியுடன் வந்து துலாக்கட்டத்தில் புனித நீராடினார்.  அதன்பின், பாரதிய ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் மற்றும் அவரது சகோதரர் இல.கோபாலன், சந்திரகோபாலன் ஆகியோரும் நீராடினர். 

ஓ.எஸ்.மணியன்

இதற்கிடையே வரும் 20-ம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ள வருகை தரவுள்ளார். அப்போது அவர் விழாவில் கலந்துகொள்ள செல்லும் வழியில் துலாக்கட்டத்தில் புனித நீராட இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முதல்வர் வருகிறார் என்பதற்காக அவர் ஒருவருக்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீரை வீணாக்கலாமா? என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.  

எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்க பொதுச் செயலாளர் சுவாமிமலை விமல்நாதன் கூறும்போது, ``காவிரி புஷ்கர திருவிழாவுக்குத் தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளதா என்று தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையிடம் கேட்டேன்.  அப்போது அவர், `தற்போது திறக்க வாய்ப்பில்லை, அடுத்த விவசாயத்துக்குத்தான் திறக்கப்படும்' என்றார். ஆனால், காலம் கடந்து முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென தண்ணீர் திறந்திருக்கிறார்கள். புஷ்கர விழாவுக்காகக் கடந்த 12-ம் தேதியே மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் தண்ணீர் இருக்கும்படி முன்னரே திறந்து விட்டிருக்க வேண்டும். ஆனால், தாமதமாக இப்போது தண்ணீர் திறக்கப்பட்டது முதல்வர் எடப்பாடி பழனிசாமி புனித நீராடுவதற்காகவா? 

அதேநேரத்தில் உயநீதிமன்ற மதுரைக் கிளையில் காவிரியில் அளவுக்கு அதிகமான மணல் கொள்ளை குறித்து வழக்குப் போடப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ஆணையம் முதல்கட்டமாக கரூர் முதல் குளித்தலை வரை 10 அடி ஆழம்வரை மணல் அள்ளப்பட்டிருப்பது குறித்து முதல்கட்ட அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்கள். இதனால், மணல் அள்ளக் கூடாது என்ற தடையை உயர்நீதிமன்றம் நீட்டித்திருக்கிறது. இந்தக் குழிகளையெல்லாம் மூடிமறைப்பதற்காகத்தான் திடீரென அரசு 10 ஆயிரம் கனஅடி நீரைத் திறந்துவிட்டிருக்கிறது என்ற சந்தேகம் எழுகிறது. புஷ்கரம் என்ற புனிதமான விழாவுக்காகத் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்பதுதான் உண்மை'' என்றார்.   

புஷ்கர விழா கமிட்டியின் துணைச் செயலாளர் அப்பர்சுந்தரம் கூறும்போது, ``இந்த ஆட்சியாளர்களுக்கு எதிலும் தெளிவில்லை. ஆன்மிகத்தையும், விவசாயத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்கிறார்கள். ஆன்மிக விழாவை நடத்த அரசு முடிவெடுத்த பிறகு அதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்திருக்க வேண்டும்.  மிகமுக்கியமானது காவிரித் தண்ணீர். அதனை உரியநேரத்தில் திறந்துவிட்டிருக்க வேண்டும். இந்த விஷயத்தில் தெளிவுஇல்லாததால்தான் தாமதமாக தண்ணீர் திறக்கிறார்கள். இதனால்தான் ஆண்டவனின் அருளாசிகூட ஆள்பவர்களுக்கும், மக்களுக்கும் கிடைக்காமல் போகிறது.  
மழையின்றி விவசாயம் அழிகிறது. விவசாயிகளின் வாழ்க்கை கண்ணீரில் கரைகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் பொறுத்தவரை ஆன்மிக விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எடுத்த முடிவையும் செயல்படுத்த இறுதிவரை உறுதியாக இருப்பார். அவர் வழியில் ஆட்சி செய்வதாகச் சொல்பவர்கள் ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றுவதில்லை. இது நீட்டிலும் சரி, தண்ணீர்த் திறப்பிலும் சரி'' என்று முடித்தார்.