புதுக் கட்சி தொடங்குவது குறித்து கமல் அதிரடி அறிவிப்பு!

சமீப காலமாக தமிழக அரசியல் குறித்து தொடர் கருத்துகள் கூறி வருகிறார் நடிகர் கமல்ஹாசன். அவர் சில நாள்களுக்கு முன்னர் கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்தார். அப்போது, 'கேரள முதல்வரிடம் அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தினேன்' என்று வெளிப்படையாகவே அறிவித்தார். சீக்கிரமே கமல் தீவிர அரசியலில் களமிறங்குவார் என்று ஆருடம் சொல்லப்பட்டது. இந்நிலையில், ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், 'தனிக்கட்சி தொடங்குவது குறித்து மிகவும் தீவிரமாக யோசித்து வருவதாக' கூறியுள்ளார்.

கமல்ஹாசன்

அந்தப் பேட்டியில் மேலும், 'நான் தனிக்கட்சி தொடங்குவது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவது உண்மைதான். விருப்பத்தினால் அல்ல கட்டாயத்தினால்தான் அந்த முடிவை நோக்கி தள்ளப்படுகிறேன். அரசியல் என்பது சித்தாந்தத்தையும் கொள்கைகளையும் அடிப்படையாக கொண்டது. எனது சித்தாந்தத்துக்கு ஏற்றாற் போல் எந்த அரசியல் கட்சியும் இல்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, இங்கு இருக்கும் அரசியல் சூழல் மாறக்கூடும்' என்று பேசியுள்ளார். 

அ.தி.மு.க-விலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டது குறித்து, 'சசிகலாவை அ.தி.மு.க-விலிருந்து வெளியேற்றியது நல்ல  முன்னேற்றமாகவே பார்க்கிறேன். ஆனால், அது ஒரேயொரு படிதான். சசிகலா வெளியேற்றப்பட வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே பேசி வந்தேன். இப்போதுதான் அரசியலுக்கு வர ஏற்ற சமயம் என்று நினைக்கிறேன். ஒன்று, நான் இங்கு இருக்க வேண்டும். அல்லது, ஊழல் இங்கு இருக்க வேண்டும். இரண்டும் ஒரே இடத்தில் இருக்க வாய்ப்பில்லை' என்று தெரிவித்துள்ளார்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!