வெடித்த ஓ.என்.ஜி.சி கிணறு: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்! | Hydrocarbon well met with a fire accident: People in protest against ONGC

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (14/09/2017)

கடைசி தொடர்பு:09:02 (15/09/2017)

வெடித்த ஓ.என்.ஜி.சி கிணறு: போராட்டத்தில் குதித்த பொதுமக்கள்!

நெடுவாசலை அடுத்த நல்லாண்டார் கொல்லையில் உள்ள ஹைட்ரோகார்பன் திட்ட எரிவாயு கிணறு தீப்பிடித்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்க கடந்த பிப்ரவரி 15-ம் தேதி மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து நெடுவாசல், நல்லாண்டார்கொல்லை, வடகாடு, கோட்டைக்காடு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அடுத்து நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக இரண்டாம் கட்டமாக 150 நாள்களுக்கும் மேலாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், நெடுவாசலை அடுத்த நல்லாண்டார் கொல்லை எனும் இடத்தில் அமைக்கப்பட்டிருந்த ஓ.என்.ஜி.சி கிணற்றில் ஏற்பட்டுள்ள தீவிபத்து அப்பகுதியில் பெரும் அச்சத்தை உண்டாக்கி உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் நல்லாண்டார் கொல்லை, வடகாடு, வானக்கன்காடு, கோட்டைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் ஓ.என். ஜி.சி. நிறுவனம் ஆழ்குழாய் கிணறு அமைத்து ஹைட்ரோ கார்பன் எடுக்க சோதனை மேற்கொண்டனர். மேலும், நல்லாண்டார் கொள்ளையில் உள்ள எரிவாயு ஆழ்குழாய் கிணற்றின் ராட்சத குழாயிலிருந்து சில தினங்களாக வாயு கசிவு ஏற்பட்டு, அதனால் கண் எரிச்சல், மயக்கம் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் நல்லாண்டார்கொல்லையில் உள்ள ஓ.என்.ஜி.சி. ஆழ்குழாய் கிணற்றை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், அதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. இந்நிலையில், இன்று மாலை நல்லாண்டார் கொல்லையில் ஏற்கெனவே, ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் அமைக்கப்பட்டிருந்த எண்ணைக் கிணறு திடீரெனத் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

தீ வேகமாக எரிய ஆரம்பித்ததால், அப்பகுதி முழுக்க, புகைமூட்டமாகக் காட்சியளித்தது. தீவிபத்து குறித்த தகவல், அப்பகுதி மக்களிடையே வேகமாகப் பரவ, அந்த எரிவாயு கிணறு உள்ள பகுதிகளுக்கு ஓடிவந்த மக்கள் பதற்றத்துடன் பார்வையிட்டனர். எரிவாயு கிணறு, தீப்பற்றி எரியும் தகவலறிந்த தீயணைப்புப் படைவீரர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்புப் பணியை தொடங்கியுள்ளனர்.

நல்லாண்டார் கொல்லையில் ஏற்பட்ட இந்தத் தீவிபத்து, அப்பகுதி மக்களிடையேயும், ஹைட்ரோகார்பனுக்கு எதிராகப் போராடும் மக்களிடையேயும் கொந்தளிப்பை உண்டாக்கியது. இதையடுத்து, உடனடியாக ஓ.என்.ஜி.சி கிணற்றை மூட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மக்கள் சாலை மறியலில் ஈடுபடத் தொடங்கினர். மாவட்டத் துணை ஆட்சியர் ஜெயபாரதி சாலை மறியலில் ஈடுபட்டிருந்த மக்களிடம் போராட்டத்தைக் கைவிடுவதற்கான சமாதான முயற்சியில் இறங்கிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close